
ஐபிஎல் போட்டியில் விளையாட 24 வயது முஸ்தாபிசுருக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஐபிஎல் போட்டியில் இருந்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி சமீபத்தில் விலகினார். தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். இதனால் ஐபிஎல் மற்றும் டி20 பிளாஸ்ட் ஆகிய இரு போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார். கடந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்தைச் சேர்ந்த 33 வயது ஹாரி கர்னி, 8 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஹாரி கர்னிக்குப் பதிலாக வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானைத் தேர்வு செய்ய கொல்கத்தா அணி விரும்பியது. ஆனால் ஐபிஎல் போட்டியில் விளையாட முஸ்தாபிசுருக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்துள்ளது. அக்டோபர் - நவம்பர் மாதங்களில் வங்கதேச அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதன் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் சேர்மன் அக்ரம் கான் கூறியுள்ளார். இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் முஸ்தாபிசுர் ரஹ்மானால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்தாபிசுர் ரஹ்மான் கடைசியாக 2018-ல் மும்பை அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடினார். 7 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.