பிரபல வீரர் நடாலுக்கு கரோனா பாதிப்பு

அபுதாபியிலிருந்து ஸ்பெயினுக்குத் திரும்பிய நடால், தனக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
பிரபல வீரர் நடாலுக்கு கரோனா பாதிப்பு

பிரபல டென்னிஸ் வீரர் நடால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 20 முறையும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை மட்டும் 13 முறையும் வென்றவர் நடால். 2021 பிரெஞ்சு ஓபன் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார். விம்பிள்டன், டோக்கியோ ஒலிம்பிக்ஸ், யு.எஸ். ஓபன் என முக்கியமான போட்டிகளில் இருந்து விலகினார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021-ம் பருவத்தை முடித்துக்கொள்வதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் நடால் அறிவித்தார்.

நான்கு மாதம் கழித்து அபுதாபியில் நடைபெற்ற காட்சிப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டார் நடால். காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலந்துகொள்வது பற்றி உறுதியாகத் தெரிவிக்க முடியாது என்று கூறினார். 

இந்நிலையில் அபுதாபியிலிருந்து ஸ்பெயினுக்குத் திரும்பிய நடால், தனக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: குவைத், அபுதாபியில் இரு நாள்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எனக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. அபுதாபி போட்டி முடிந்த பிறகு ஸ்பெயினில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் எனக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. போட்டிகளில் கலந்துகொள்வது பற்றி விரைவில் தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com