எங்களுக்குப் பயம் கிடையாது: பென் ஸ்டோக்ஸ்

எப்போதும் சரியான திட்டங்களுடன் நாங்கள் களமிறங்குவோம் என்றார். 
எங்களுக்குப் பயம் கிடையாது: பென் ஸ்டோக்ஸ்

பெரிய ஸ்கோரை வெற்றிகரமாக விரட்டும்போது நாங்கள் பயப்படுவதில்லை என இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்கை 43.3 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 124 ரன்களும் ஸ்டோக்ஸ் 99 ரன்களும் ஜேசன் ராய் 55 ரன்களும் எடுத்தார்கள். பென் ஸ்டோக்ஸ் 10 சிக்ஸர்களும் பேர்ஸ்டோவ் 7 சிக்ஸர்களும் அடித்தார்கள்.

இந்த ஆட்டம் குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:

முதல் ஒருநாள் ஆட்டத்தை விடவும் இது நல்ல ஆடுகளமாக இருந்தது. கடந்த சில வருடங்களாக, முதலில் பேட்டிங் செய்கிறபோது பெரிய ஸ்கோரை அடித்தோம், அதேபோல பெரிய ஸ்கோரையும் நாங்கள் வெற்றிகரமாக விரட்டியுள்ளோம். நாங்கள் எந்த ஸ்கோருக்கும் பயப்பட மாட்டோம். 

ஆடுகளத்தில் நேர்மறை எண்ணங்களுடன் விளையாட முயற்சி செய்வோம். ஒரு சூழலில் நாங்கள் மாட்டிக்கொண்டால் நேர்மறை எண்ணங்களுடன் விளையாட எங்கள் வீரர்களை ஊக்கப்படுத்துவோம். 

முதல் ஒருநாள் ஆட்டத்தில் தோல்வியடைந்தது குறித்து விவாதித்தோம். சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும்போது அதிரடியாக விளையாட நான் முன்வந்தேன். ஜானி பேர்ஸ்டோவ் அவருக்கு ஏற்ற வகையில் விளையாடட்டும் என எண்ணினேன். அவர் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். 

எங்கள் திட்டங்களிலிருந்து நாங்கள் வெளியேறவில்லை. இதுதான் மகிழ்ச்சியை அளிக்கிறது. முதல் ஆட்டத்தில் விளையாடிய விதத்தில் நாங்கள் வேதனையடைந்தோம். எப்போதும் சரியான திட்டங்களுடன் நாங்கள் களமிறங்குவோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com