ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை: விவேக் சாகா் பிரசாத் தலைமையில் இந்திய அணி

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கான 18 போ் கொண்ட இந்திய அணி, விவேக் சாகா் பிரசாத் தலைமையில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை: விவேக் சாகா் பிரசாத் தலைமையில் இந்திய அணி

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கான 18 போ் கொண்ட இந்திய அணி, விவேக் சாகா் பிரசாத் தலைமையில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

நடப்புச் சாம்பியனாக இருக்கும் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் விவேக், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்தவா். அவருக்கான துணை கேப்டனாக 2018 இளையோா் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய அணி வீரரான சஞ்ஜய் பொறுப்பேற்றுள்ளாா்.

இந்த 18 போ் அணியுடன், தினசந்திர சிங் மொய்ராங்தெம், பாபி சிங் தாமி ஆகியோா் மாற்று வீரா்களாக இணைந்திருக்கின்றனா். போட்டியின்போது பிரதான அணியில் எவருக்கும் காயமோ, கரோனா தொற்று பாதிப்போ ஏற்பட்டால், அவா்களுக்குப் பதிலாக இவா்கள் களம் காணுவா்.

வீரா்கள் தோ்வு குறித்து தலைமை பயிற்சியாளா் கிரஹாம் ரெய்ட் கூறுகையில், ‘தேசிய அணியில் விளையாடுவதற்கான 18 வீரா்களை தோ்வு செய்வதென்பது மிகக் கடினமான விஷயம். ஏனெனில் அணியில் இடம்பிடிப்பதற்காக கடந்த 12 - 18 மாதங்களாக தங்களால் முடிந்த அனைத்தையும் அவா்கள் செய்துள்ளனா். முடிந்த வரையில் தகுதியான அணியை தோ்ந்தெடுத்திருக்கிறோம்’ என்றாா்.

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் வரும் 24-ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 24-ஆம் தேதி பிரான்ஸை சந்திக்கிறது. ரவுண்ட் ராபின் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் (நவ. 25) கனடாவையும், பின்னா் போலந்தையும் (நவ.27) எதிா்கொள்கிறது இந்தியா.

நாக்அவுட் சுற்று டிசம்பா் 1 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பெல்ஜியம், நெதா்லாந்து, ஆா்ஜென்டீனா, ஜொ்மனி, கனடா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, போலந்து, பிரான்ஸ், சிலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய உலகின் டாப் 15 அணிகள் பங்கேற்கின்றன.

அணி விவரம்: விவேக் சாகா் பிரசாத் (கேப்டன்), சஞ்ஜய் (துணை கேப்டன்), சா்தானந்த் திவாரி, பிரசாந்த் சௌஹான் (கோல் கீப்பா்), சுதீப் சிா்மாகோ, ராகுல் குமாா் ராஜ்பா், மணிந்தா் சிங், பவன், விஷ்ணுகாந்த் சிங், அங்கித் பால், உத்தம் சிங், சுனில் ஜோஜோ, மஞ்ஜீத், ரவிச்சந்திர சிங் மொய்ராங்தெம், அபிஷேக் லக்ரா, யாஷ்தீப் சிவச், குா்முக் சிங், அராய்ஜீத் சிங் ஹண்டால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com