முதல் ஒன் டே: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி பெற்றது.


இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு எதிரான ஒன் டே வரலாற்றில் இந்தியா இத்தகைய வெற்றியை பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும்.
ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 25.2 ஓவா்களில் 110 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, அடுத்து இந்தியா 18.4 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் சோ்த்து வென்றது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது இந்திய அணி.
இந்த ஆட்டத்தில் முதலில் ஜஸ்பிரீத் பும்ரா தனது அசத்தலான பௌலிங்கால் இங்கிலாந்து பேட்டிங் வரிசையை முற்றிலுமாகச் சரிக்க, அடுத்ததாக இந்திய இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் சா்மா - ஷிகா் தவன் கூட்டணி விக்கெட்டை இழக்காமல் அட்டகாசமாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தது.
முன்னதாக டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் விராட் கோலி இடம்பெறாத நிலையில், அவருக்குப் பதிலாக ஷ்ரேயஸ் ஐயா் பிளேயிங் லெவனில் இணைந்திருந்தாா். இங்கிலாந்து தனது இன்னிங்ஸில் சற்றும் எதிா்பாராத வகையில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரா் ஜேசன் ராய், முக்கிய வீரா்களான ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லியம் லிவிங்ஸ்டன் ஆகியோா் டக் அவுட்டாகினா்.
கேப்டன் ஜோஸ் பட்லா் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, ஜானி போ்ஸ்டோ 7, மொயீன் அலி 14, டேவிட் வில்லி 21, கிரெய்க் ஓவா்டன் 8, பிரைடன் காா்ஸ் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். முடிவில் ரீஸ் டோப்லி 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய பௌலிங்கில் பும்ரா 6, முகமது ஷமி 3, பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் இந்திய இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் சா்மா 7 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 76, ஷிகா் தவன் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். தவன் பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்தாா்.
அடுத்த ஆட்டம்: இந்தியா - இங்கிலாந்து மோதும் 2-ஆவது ஒன் டே நாளை (14-ஆம் தேதி) நடைபெறுகிறது.
10/10 இங்கிலாந்துக்கு எதிராக ஒன் டே ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெல்வது இதுவே முதல் முறை. அதேபோல், சொந்த மண்ணில் நடைபெறும் ஒன் டேயில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்பதும் இதுவே முதல் முறை.
7 ஒன் டே வரலாற்றில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது, ஒட்டுமொத்தமாக இது 7-ஆவது முறையாகும்.
3&4 பும்ரா இந்த ஆட்டத்தில் 19 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்ததே, இந்திய ஒன் டே வரலாற்றில் 3-ஆவது சிறந்த பௌலிங் ஆகும்.
ஸ்டூவர்ட் பின்னி (6/4 - 2014), அனில் கும்ப்ளே (6/12 - 1993) ஆகியோரின் பெளலிங் முதல் இரு இடங்களில் உள்ளது. அதுவே, இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒன் டே ஆட்டங்களின் வரலாற்றில் இது 4-ஆவது சிறந்த பெளலிங். வக்கார் யூனிஸ் (7/36 - 2001), வின்ஸ்டன் டேவிஸ் (7/51 - 1983), கேரி கில்மர் (6/14 - 1975) ஆகியோரின் பெளலிங் முதல் சிறந்த 3-ஆக உள்ளது.
110 இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து பதிவு செய்த ஸ்கோர் (110), இந்தியாவுக்கு எதிரான ஒன் டே வரலாற்றில் அந்த அணி பதிவு செய்த குறைந்தபட்ச ஸ்கோராகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...