தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இந்திய அணி தயாரா?: முழு உடற்தகுதியை அடைந்தார் ஷாஹீன் அஃப்ரிடி!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி முழு உடற்தகுதியை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2022, 12:18 pm

DIN

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி முழு உடற்தகுதியை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், காயம் காரணமாக ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்தும் இங்கிலாந்துத் தொடரிலிருந்தும் ஷாஹீன் அஃப்ரிடி விலகினார். நியூசிலாந்தில் நடைபெறும் முத்தரப்பு டி20 போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. எனினும் டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் அவர் இடம்பெற்றார். 

இந்நிலையில் காயத்திலிருந்து ஷாஹீன் அஃப்ரிடி குணமாகி முழு உடற்தகுதியை அடைந்து விட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடங்கும் முன்பு ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ள இரு பயிற்சி ஆட்டங்களிலும் அஃப்ரிடி பங்கேற்பார் என்றும் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தார்  அஃப்ரிடி. ரோஹித் சர்மா, ராகுல், கோலி ஆகிய மூன்று முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதனால் அக்டோபர் 23 அன்று நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டத்திலும் இந்திய பேட்டர்களுக்கு அஃப்ரிடி சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.