அனைத்து இந்திய டி20 உலகக் கோப்பை அணிகளிலும் இடம்பிடித்த ஒரே வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் பிரபல வீரர் ரோஹித் சர்மா.
அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பும்ரா, ஹர்ஷல் படேல் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மாற்று வீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஸ்னோய், தீபக் சஹார் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள்.
டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றதன் மூலம் ரோஹித் சர்மா ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2007, 2009, 2010, 2012, 2014, 2016, 2021, 2022 என அனைத்து டி20 உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான இந்திய அணிகளிலும் ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார். இந்தப் பெருமை வேறு எந்த இந்திய வீரருக்கும் கிடையாது. இந்தமுறை முதல்முறையாக இந்திய அணியின் கேப்டனாக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் களமிறங்குகிறார். 2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்.
இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களில் கோலி, தினேஷ் கார்த்திக் போன்றோர் உள்ளார்கள். விராட் கோலி 2010 முதல் தான் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஆனால் 2012-ல் தான் முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.
தினேஷ் கார்த்திக் 2007, 2009, 2010 ஆகிய மூன்று டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.