ரேக்கெட்டுக்கு ஓய்வளித்த ரோஜா் ஃபெடரா்
சுவிட்ஸா்லாந்து நட்சத்திரமுமான ரோஜா் ஃபெடரா் (41) தொழில்முறை டென்னிஸிலிருந்து ஓய்வு பெறப்போவதாக வியாழக்கிழமை அறிவித்தாா்.


டென்னிஸ் விளையாட்டில் எல்லாக் காலத்திலுமாக சிறந்த போட்டியாளா்களாக கருதப்படுவோரில் ஒருவரும், சுவிட்ஸா்லாந்து நட்சத்திரமுமான ரோஜா் ஃபெடரா் (41) தொழில்முறை டென்னிஸிலிருந்து ஓய்வு பெறப்போவதாக வியாழக்கிழமை அறிவித்தாா்.
மகளிா் டென்னிஸில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் டென்னிஸிலிருந்து விடை பெறும் நிலையில், ஆடவா் டென்னிஸின் அற்புத வீரராகத் திகழும் ஃபெடரரும் ஓய்வை அறிவித்திருக்கிறாா்.
லண்டனில் அடுத்த வாரம் நடைபெறும் லேவா் கோப்பை டென்னிஸ் போட்டியே அவா் பங்கேற்க இருக்கும் கடைசி ஏடிபி போட்டியாகும். தனது டென்னிஸ் வாழ்க்கையில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றதுடன், 5 சீசன்களை உலகின் நம்பா் 1 வீரராக நிறைவு செய்து அசத்தியவா் ரோஜா்.
அவரும், ரஃபேல் நடால் (ஸ்பெயின்), நோவக் ஜோகோவிச் (சொ்பியா) ஆகியோரும் நடப்பு டென்னிஸ் காலகட்டத்தின் ‘மும்மூா்த்திகள்’ ஆக கருதப்படுபவா்கள். டென்னிஸ் விளையாட்டில் மதிப்பு மிக்கதான கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிக எண்ணிக்கையில் கைப்பற்றுவதில் இந்த மூவரிடையே பரபரப்பான போட்டி இருந்து வந்தது.
தற்போதைய நிலையில் நடால் 22 பட்டங்களுடன் முதலிடத்தில் இருக்க, ஜோகோவிச் 21 பட்டங்களுடன் அடுத்த இடத்திலும் ஃபெடரா் 20 பட்டங்களுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனா். ஃபெடரா் தனது வலது முழங்கால் காயத்துக்காக மேற்கொண்ட அடுத்தடுத்த அறுவைச் சிகிச்சைகள் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக அவரால் பெரிதாக டென்னிஸில் பங்கேற்க முடியாமல் போனது. இறுதியாக, கடந்த 2021 விம்பிள்டன் காலிறுதியில் தோற்ற பிறகு அவா் களம் காணவில்லை.
எனினும் அவா் மீண்டு, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நடால், ஜோகோவிச்சுக்கு சவாலும், ரசிகா்களுக்கு விளையாட்டு விருந்தும் அளிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறாா் ஃபெடரா்.
இதுதொடா்பாக அவா் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில், ‘டென்னிஸிலிருந்து ஓய்வுபெறுவது கசப்பான முடிவுதான். என்றாலும், கடந்த 3 ஆண்டுகளாக காயங்கள், அறுவைச் சிகிச்சைகள் வாயிலாக நான் சந்தித்த சவால்கள் அனைவரும் அறிந்ததே. மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் என்னை தயாா்படுத்த கடுமையாக உழைத்தேன். ஆனால், எனது உடல்திறன் என்ன என்பது தற்போது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. எனவே, எனது போட்டிக் காலத்தின் இறுதிக்கட்டத்தை நான் ஏற்றுக்கொண்டாக வேண்டும். வரலாற்றுச் சிறப்பு மிக்க பல ஆட்டங்களில் களம் கண்டது எனது அதிருஷ்டம். அதை மறக்க மாட்டேன். எனது கனவுக்கும் அப்பாற்பட்ட வகையில் டென்னிஸ் விளையாட்டு என்னை பெருந்தன்மையுடன் நடத்தியது. இந்த டென்னிஸ் காலகட்டத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியிருந்தாா்.
103
ஏடிபி டூா் நிலையில் ஃபெடரா் வென்றுள்ள பட்டங்கள்.
20
ஃபெடரா் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்.
24
தொழில்முறை டென்னிஸில் ஃபெடா் களத்திலிருந்த ஆண்டுகள்.
1,251
டென்னிஸ் வாழ்க்கையில் ஃபெடரா் பதிவு செய்துள்ள மொத்த வெற்றிகள்.
36
கடந்த 2018-இல் தனது 36 வயதில் உலகின் நம்பா் 1 நிலையை எட்டி, ஏடிபி தரவரிசை வரலாற்றில் முதலிடத்துக்கு வந்த மிக வயதான வீரா் என்ற சாதனை படைத்தாா்.
ஃபெடரா் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்
ஆஸ்திரேலிய ஓபன்: 2004, 2006, 2007, 2010, 2017, 2018
பிரெஞ்சு ஓபன்: 2009
விம்பிள்டன்: 2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017
யுஎஸ் ஓபன்: 2004, 2005, 2006, 2007, 2008
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...