ஐபிஎல்-லில் கெயில் இனி இல்லை: ரசிகர்கள் சோகம்

ஐபிஎல் போட்டியில் அதிக சதங்கள் (6), அதிக சிக்ஸர்கள் (357) அடித்தவரும் கெயில் தான்.
ஐபிஎல்-லில் கெயில் இனி இல்லை: ரசிகர்கள் சோகம்

ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் கிறிஸ் கெயில் தான். இனிமேல் அந்த இமாலய சிக்ஸர்களைக் காண வாய்ப்பு கிடைக்காது. 

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்துள்ள வீரர்களின் பட்டியலை 10 அணிகளுக்கும் அனுப்பியுள்ளது பிசிசிஐ. அந்தப் பட்டியலில் கிறிஸ் கெயிலின் பெயர் இடம்பெறவில்லை. 

ஐபிஎல் 2021 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் கிறிஸ் கெயில். கடந்த வருடப் போட்டியில் 10 ஆட்டங்களில் விளையாடி 193 ரன்கள் எடுத்தார். திடீரென ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலக முடிவெடுத்து கரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேறினார் கெயில். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் துபையில் நான் இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். எனக்கு ஓய்வளிக்க சம்மதம் தெரிவித்த பஞ்சாப் அணிக்கு நன்றி என்று கூறினார்.

டி வில்லியர்ஸ் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு எடுத்ததையடுத்து கெயிலும் ஐபிஎல்-லில் இருந்து விலகியிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஐபிஎல் போட்டியின் வெற்றிக்கு அதிகமாக உழைத்த வெளிநாட்டு வீரர்களில் முதல் இரு இடங்களை டி வில்லியர்ஸுக்கும் கிறிஸ் கெயிலுக்கும் வழங்கலாம். அந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய இருவரையுமே ஐபிஎல் 2022 போட்டியில் காண முடியாது என்பது வருத்தமான விஷயம் தான். ஏலப் பட்டியலில் கெயில் பெயர் இல்லாத தகவலை அறிந்த ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

ஐபிஎல் போட்டியில் 142 ஆட்டங்களில் விளையாடி 4965 ரன்கள் எடுத்துள்ளார் கெயில். ஸ்டிரைக் ரேட் - 148.96. ஐபிஎல் போட்டியில் அதிக சதங்கள் (6), அதிக சிக்ஸர்கள் (357) அடித்தவரும் கெயில் தான். 2013-ல் புணே அணிக்கு எதிராக கெயில் அடித்த 175* ரன்கள் தான் இன்றைக்கும் ஐபிஎல்-லில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது. ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளார். 

2008-ல் கொல்கத்தா அணி கெயிலை முதல்முதலாகத் தேர்வு செய்தது. காயம் காரணமாக அப்போது ஓர் ஆட்டத்திலும் அவர் விளையாடவில்லை. 2009-ல் தில்லி அணியில் அறிமுகமானார். 2011-ல் ஆர்சிபி அணிக்குத் தேர்வானார். அதிலிருந்து கெயிலின் தனித்துவமான டி20 திறமையை உலகம் அறிய ஆரம்பித்தது. முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணிக்கு எதிராக 55 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்தார். 2018-ல் கெயில் - ஆர்சிபி கூட்டணி பிரிந்தது. 2021 வரை பஞ்சாப் அணிக்காக கெயில் விளையாடினார். ஐபிஎல் 2022 போட்டிக்காக இரு வீரர்களை மட்டும் தக்கவைத்த பஞ்சாப் அணி, கெயிலைத் தக்கவைக்கவில்லை. ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதை கெயில் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில், தனது கடைசி ஆட்டத்தைச் சொந்த ஊரான ஜமைக்காவில் விளையாட விருப்பம் தெரிவித்தார். கரோனா கட்டுப்பாடுகள் முடிந்த பிறகு ஜமைக்காவில் விளையாடி தனது கிரிக்கெட் பயணத்தை கெயில் முடித்துக்கொள்ளவுள்ளார். 42 வயது கெயில் - 103 டெஸ்டுகள், 301 ஒருநாள், 79 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com