கவலை வேண்டாம் ஆர்சிபி ரசிகர்களே: பிளேஆஃப் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இதோ!

டபிள்யூபிஎல் போட்டியில் மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து...
கவலை வேண்டாம் ஆர்சிபி ரசிகர்களே: பிளேஆஃப் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இதோ!

டபிள்யுபிஎல் போட்டியில் மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து வெளியேறும் நிலைமையில் உள்ளது.

ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் தில்லி அணி வென்றது. அந்த அணி 8 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது.

சரி, பிளேஆஃப்புக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு ஆர்சிபிக்கு உள்ளதா? நெட் ரன்ரேட் கணக்கு இல்லாமல் புள்ளிகளின் அடிப்படையில் முன்னேற முடியுமா?

நம்பிக்கை இழக்க வேண்டாம் ஆர்சிபி ரசிகர்களே. தொலைதூரத்தில் வெளிச்சம் தெரிகிறது. அதை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்தால் எதுவும் சாத்தியமாகும். என்ன, இந்தப் பயணத்துக்கு மற்றவர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

டபிள்யுபிஎல் போட்டியில் மும்பை, தில்லி அணிகள் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளன. உ.பி. அணி 4 புள்ளிகளையும் குஜராத் அணி 2 புள்ளிகளையும் பெற்றுள்ளன. ஆர்சிபி அணியின் கைவசம் தற்போதைக்கு எந்தப் புள்ளியும் இல்லை. அதனால் என்ன, காலி கோப்பையைப் புள்ளிகளால் நிரப்பி விடுவோம். 

வழக்கமாக இப்படிப்பட்ட சாத்தியக்கூறுகள் எல்லாம் ஐபிஎல் போட்டியில் தான் விரிவாக விவாதிக்கப்படும். இப்போது டபிள்யுபிஎல் போட்டியிலும் ஆரம்பமாகிவிட்டது. 

ஆர்சிபி அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற வேண்டும் என்றால்....

குஜராத், உ.பி., தில்லி ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களை மும்பை வெல்ல வேண்டும். ஆனால் ஆர்சிபியிடம் தோற்க வேண்டும். 

ரைட்டு.

குஜராத், உ.பி. ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களை தில்லி வெல்ல வேண்டும். மும்பையிடம் தோற்க வேண்டும். 

ரைட்டு. 

இனிமேல் தான் ஆர்சிபி பக்கம் பலமான காற்று அடிக்க வேண்டும். 

உ.பி. அணியை குஜராத் தோற்கடிக்க வேண்டும். ஆனால் ஆர்சிபி, தில்லி, மும்பை அணிகளிடம் தோற்க வேண்டும். அதாவது குஜராத் அணி இனிமேல் ஓர் ஆட்டத்தில் மட்டுமே ஜெயிக்க வேண்டும். 

உ.பி. அணி இன்னும் மோசம். மீதமுள்ள நான்கு ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். அதாவது தில்லி, குஜராத், மும்பை, ஆர்சிபி அணிகளுக்கு எதிரான எந்தவொரு ஆட்டத்திலும் உ.பி. ஜெயிக்கவே கூடாது. 

சரி, இவை அனைத்தும் நினைத்தபடியே நடக்கின்றன என  வைத்துக்கொள்வோம். அவ்வளவுதானா? 

ஆர்சிபி அணிக்காக மற்ற அணிகள் ஒத்துழைக்கும்போது ஆர்சிபி அணியும் தன் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும் இல்லையா?

ஆர்சிபி அணி மீதமுள்ள மூன்று ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும். ஆமாம். தனது கடைசி மூன்று ஆட்டங்களில் மும்பை, குஜராத், உ.பி. ஆகிய மூன்று அணிகளையும் வென்றால் பிளேஆஃப் வாய்ப்பு ஆர்சிபிக்கு உறுதியாகி விடும்.

மேலே சொன்னதெல்லாம் நடந்தால், லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிகள் பட்டியல் இப்படிக் காட்சியளிக்கும். (முதல் அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும். 2-வது, 3-வது இடங்களைப் பிடித்த அணிகள் பிளேஆஃப் சுற்றில் விளையாடும்.)

1. மும்பை - 14 புள்ளிகள்
2. தில்லி - 12 புள்ளிகள்
3. ஆர்சிபி - 6 புள்ளிகள்
4. குஜராத் - 4 புள்ளிகள்
5. உ.பி. - 4 புள்ளிகள்

எனவே ஆர்சிபி ரசிகர்களே கவலை வேண்டாம். நம்பிக்கையுடன் இனி வரும் ஆட்டங்களைக் காணுங்கள். ஈ சாலா கப் நம்தே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com