என் விடியோவைப் பார்த்துதான் ஆஸி. அணி ஜெயித்ததா?: அஸ்வின் கேள்வி

சுழற்பந்துவீச்சை விளையாடுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டீர்கள்...
என் விடியோவைப் பார்த்துதான் ஆஸி. அணி ஜெயித்ததா?: அஸ்வின் கேள்வி

தன்னுடைய யூடியூப் விடியோவைப் பார்த்து ஆஸ்திரேலிய அணி ஜெயித்ததாகக் கூறியவர்களுக்குப் பதில் அளித்துள்ளார் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ் டிரா ஆனது. ஆமதாபாத் டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் தன்னுடைய யூடியூப் சேனலில் ஆஸி. தொடர் பற்றி அஸ்வின் கூறியதாவது:

தில்லி டெஸ்ட் பற்றி என்னுடைய விமர்சனத்தை அளித்தேன். என்னுடைய அட்மின், சுழற்பந்துவீச்சை விளையாடுவது எப்படி என்று அந்த விடியோவுக்குத் தலைப்பு வைத்தார். இதை நான் எப்படிச் சொல்ல முடியும் என மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன். இருந்தும் அந்த விடியோவில் அதுபற்றி ஒன்றிரண்டு குறிப்புகள் இருந்தன. உங்களுடைய தடுத்தாடும் ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று வழக்கமாக எல்லோரும் சொல்வதையே நானும் சொல்லியிருந்தேன். அதற்குப் பிறகு இந்தூர் டெஸ்டில் இந்தியா தோற்றது. உடனே எல்லோரும் வரிசையாக வண்டி கட்டி வந்து, நீங்கள் சுழற்பந்துவீச்சை விளையாடுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டீர்கள் எனச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது நகைச்சுவையாக இருந்தது. 

ராகுல் டிராவிட், ஆண்ட்ரூ மெக்டோனால்ட் ஆகியோர் பல வருட அனுபவங்களினால் பயிற்சியாளர்களாக உள்ளார்கள். ஆனால் நான் வெளியிட்ட ஒரு விடியோவைப் பார்த்து அதிலிருந்து கற்றுக்கொண்டு, ஆஸ்திரேலிய அணி விளையாடி ஜெயித்தது போன்ற உணர்வைத் தந்தார்கள். பரவாயில்லையே, ஒரே ஒரு விடியோவை வெளியிட்டு அதன் மூலமாக ஆஸ்திரேலியாவை ஜெயிக்க வைத்து விட்டோம் என்கிற சந்தோஷத்துடன் தூங்கச் சென்றேன். அடுத்த நாள் விடியோவின் தலைப்பை அட்மின் மாற்றிவிட்டார். அதேபோல இங்கிலாந்து இதற்கு முன்பு ஆமதாபாத்தில் விளையாடியபோது, எது நல்ல ஆடுகளம் என ஒரு விடியோவை வெளியிட்டிருந்தேன். திடீரென தற்போது அதை நிறைய பேர் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com