படம்: எக்ஸ் | இன்ஸமாம் உல் ஹக்
படம்: எக்ஸ் | இன்ஸமாம் உல் ஹக்

பாகிஸ்தான் தேர்வுக்குழுத் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் ராஜிநாமா!

பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாக இன்ஸமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
Published on

53 வயதாகும் இன்ஸமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணியை தேர்வு செய்யும் தேர்வுக் குழுத் தலைவராக கடந்த 2016 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் செயல்பட்டுள்ளார். ஆக.2023இல் மீண்டும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் தேர்வுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். 

பாகிஸ்தான் அணிக்காக இன்ஸமாம் உல் ஹக் 120 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,830 ரன்கள் குவித்துள்ளார். அதில் 25 சதங்கள் மற்றும் 46 அரைசதங்கள் அடங்கும். 378 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 11,739 ரன்கள் குவித்துள்ளார். அதில் 10 சதங்கள் மற்றும் 83 அரைசதங்கள் அடங்கும். பாகிஸ்தான் அணிக்காக ஒரு டி20 போட்டியில் அவர் விளையாடியுள்ளார். 

இந்தியாவில் நடைபெற்றுவரும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்தவரும் இவரே. பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருவதால் இன்ஸமாம் மீது புகார்கள் எழுந்தன. இதனையடுத்து பிசிபி (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) 5 பேர் கொண்ட உண்மைக் கண்டறியும் குழுவினை அமைத்துள்ளது. 

யாஜோ இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் இன்ஸமாம் பங்குதாரராக இருக்கிறார என்றும் பாக். அணியின் முக்கியமான வீரர்களுக்கு இந்த நிறுவனம்தான் முகவராக இருப்பதால் இந்த உலகக் கோப்பை அணியில் இன்ஸமாம் தேர்வு செய்த அணியில் ஊழல் நடந்துள்ளதாகவும் முன்னாள் பாக். கேப்டன் கூறியதால் இந்த விவாதம் பெரியதாகியது. 

இந்நிலையில், இன்ஸமாம் உல் ஹக் தான் பாகிஸ்தான் தேர்வுக்குழுத் தலைவர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளார். “பிரச்னையை ஆராயாமல் மக்கள் பேசுகிறார்கள். என்னை குற்றம்சாட்டினால் என்னை விசாரியுங்கள். நான் பதிலளிக்கிறேன். நான் விசாரணைக்கு எப்போதும் தயாராக இருக்கிறேன். எதாவது தவறாக நடந்திருந்தால் விசாரணையில் வெளிக்கொணருங்கள். எனக்கும் வீரர்களின் ஏஜெண்ட் நிறுவனத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதுமாதிரியான புகார்கள் என்னை காயப்படுத்துகின்றன. என் மீது தவறில்லை எனும்பட்சத்தில் மீண்டும் பொறுப்பு ஏற்பேன் “ எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com