24 ஆண்டுகால தோல்வி.. என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான்?

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
24 ஆண்டுகால தோல்வி.. என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான்?
Published on
Updated on
2 min read

உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் வந்த பாகிஸ்தானுக்கு சோதனைமேல் சோதனை என்பதுபோல் எவ்வளவு முயன்றும் சரிவை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறார்கள்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியையே தழுவியுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. கடைசியாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி அந்த அணியின் மீதும் கேப்டன் பாபர் அசாமின் மீதும் விமர்சனங்களை அதிகப்படுத்தியது.

முக்கியமாக, ஆப்கன் போன்ற அணியின் பேட்ஸ்மேன்களை பாக். அணியின் பந்துவீச்சாளர்கள் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பது விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால், பாபர் அசாம் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலர் வலியுறுத்தினர்.

இதனைக் கருத்தில் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ,  “இந்த உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறினால் பாபர் அசாமின் கேப்டன் பதவி குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

இனி நடைபெறும் மீதமுள்ள 4 போட்டிகளிலும் தொடர்ந்து வென்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்குள் நுழைய முடியும். இந்நிலையில்,  பலம்கொண்ட தென்னாப்பிரிக்கா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று எதிர்கொள்கிறார்கள்.

சென்னையின் ஆடுகளம் முழுக்க சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது என்பதால் இன்றைய ஆட்டத்தின் வெற்றி, தோல்விகளில் சுழற்பந்தின் ஆதிக்கம் இருக்க வாய்ப்பு உண்டு.   கடந்த ஆட்டத்தில் ஆப்கன் அணியே பாக். பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். இப்போது, தென்னாப்பிரிக்க அணி குவிண்டன் டிகாக் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களுடன் நல்ல நிலையில் இருப்பதால் பாகிஸ்தான் தன் பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதேநேரம், கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில்தான் இறுதியாக தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தனை வென்றிருந்ததது. இடைப்பட்ட இந்த 24 ஆண்டுகளில் எந்த உலகக்கோப்பைத் தொடரிலும் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தானை வெல்லவில்லை. அதனால், வரலாற்றை மாற்றும் வேகத்தில் தென்னாப்பிரிக்க அணி முழு வேகத்தில் இறங்குவார்கள் என்பதாலும் தோல்வியிலிருந்து தப்பிக்க பாகிஸ்தானும் தன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால் இன்றைய ஆட்டத்தைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com