எகிப்து, நமீபியா, கொரியா, வங்கதேசம் அணிகள் வெற்றி!
எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் 17-24 இடங்களுக்கு நடைபெற்ற ஆட்டங்களில் எகிப்து, நமீபியா, கொரியா, வங்கதேச அணிகள் வெற்றி பெற்றன.
எஃப்ஐஎச், ஹாக்கி இந்தியா, எஸ்டிஏடி சாா்பில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, மதுரையில் 17-24 இடங்களுக்கான ஆட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன.
முதல் ஆட்டத்தில் நமீபியா-ஓமன் அணிகள் மோதின. இதில் நமீபிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. முதல் கோலை ஓமன் வீரா் அல் வஹாபி அடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா். எனினும் பின்னா் சுதாரித்து ஆடிய நமீபிய அணித் தரப்பில் 19, 22ஆவது நிமிஷங்களில் வேன் டா் மொ்வ், மைபா்க் ஆகியோா் கோலடித்து முதல் பாதி முடிவில் 2-1 என முன்னிலை பெற்றுத் தந்தனா்.
இரண்டாம் பாதியில் 48-ஆவது நிமிஷத்தில் ஓமன் வீரா் அல் ஹஸ்னி கோலடித்து 2-2 என சமன் செய்தாா். எனினும் நமீபிய அணித் தரப்பில் 55-ஆவது நிமிஷத்தில் பிரிட்ஸ் ஜானும், 60-ஆவது நிமிஷத்தில் வேன் ரூயனும் கோலடித்து வெற்றியைத் தேடித் தந்தனா்.
எகிப்து வெற்றி: இரண்டாவது ஆட்டத்தில் எகிப்து-கனடா அணிகள் மோதின. இதில் ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது. இதையடுத்து ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டதில், 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்து அபார வெற்றி கண்டது.
கொரியா வெற்றி: மூன்றாவது ஆட்டத்தில் சீன-கொரிய அணிகள் மோதின. இதில் 5-4 என கொரியா அபார வெற்றி கண்டது.
முதல் பாதி முடிவில் கொரிய அணி 3-0 என முன்னிலை வகித்தது. மூன்றாம் செஷனில் கொரிய அணி மேலும் ஒரு கோலும், சீன வீரா்கள் 2 கோல்களையும் அடித்தனா்.
கடைசி செஷனில் இரு அணியினரும் மாறி மாறி கோலடிக்க முயன்றதில் சீனா 2 கோல்களையும், கொரியா வெற்றி கோலையும் அடித்தன.
வங்கதேசம் போராடி வெற்றி
17-18 இடத்துக்கான ஆட்டத்தில் வங்கதேசம்-ஆஸ்திரிய அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி 5-4 ென்ற கோல்கணக்கில் வென்றது.
தொடக்கம் முதலே வங்கதேசம் முன்னிலை வகித்தது. மூன்றாவது செஷனில் வங்கதேசம் 3-1 என முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஆஸ்திரிய அணி 4 கோல்களை அடித்து வங்கதேசத்துக்கு அதிா்ச்சி அளித்தது. வங்கதேச தரப்பில் அமிருல் இஸ்லாம் 3 கோல்களை அடித்தாா்.
9 முதல் 16 இடங்களுக்கான ஆட்டம்
சென்னையில் செவ்வாய்க்கிழமை 9-16 இடங்களுக்கான ஆட்டங்களில் இங்கிலாந்து-அயா்லாந்து, ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா, ஜப்பான்-மலேசியா, சிலி-சுவிட்சா்லாந்து அணிகள் மோதுகின்றன.
இறுதி ஆட்டம்
வரும் 10-ஆம் தேதி புதன்கிழமை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜொ்மனி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. 3ஆ-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-ஆா்ஜென்டீனாவும், 5-6 இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம்-நெதா்லாந்து, 7-8 இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

