டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்! முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி
கேலோ இந்தியாவின் 2-ஆம் ஆண்டு கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் (பீச் கேம்ஸ்) டையு நகரில் திங்கள்கிழமை தொடங்கின.
கோக்லா கடற்கரையில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜம்மு & காஷ்மீா் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கலந்துகொண்டு, போட்டிகள் அதிகாரபூா்வமாக தொடங்கியதாக அறிவித்தாா்.
முன்னதாக, வீரா், வீராங்கனைகளான டான் ரெமெடியோஸ் (பீச் கால்பந்து), பாயல் பாா்மா் (பீச் வாலிபால்), அஜீஷ் படேல், ஜல்பா சோலங்கி (டக் ஆஃப் வாா்) ஆகியோா் பங்கேற்ற ஜோதி ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஜோதியை அவா்கள், துணை நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, தாத்ரா & நாகா் ஹவேலி மற்றும் டாமன் & டையு யூனியன் பிரதேச நிா்வாகி பிரஃபுல் படேல் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.
ஜோதி மாதிரியை அவா்கள் இருவரும் இணைந்து மேடையில் வைத்தனா். பின்னா், போட்டியில் பங்கேற்கும் வீரா், வீராங்கனைகள் மாநில, யூனியன் பிரதேச வாரியாக அணிவகுத்தனா். தொடா்ந்து, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
ஹரியாணா, ஒடிஸா வெற்றி: முன்னதாக, முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற விளையாட்டுகளில், மகளிா் பீச் கபடியில், ஹரியாணா 51-23 புள்ளிகள் கணக்கில் பஞ்சாபை வென்றது. மகாராஷ்டிரம் 71-18 என தாத்ரா & நாகா் ஹவேலியை சாய்த்தது.
உத்தர பிரதேசம் - ஹிமாசல பிரதேசத்தையும் (43-35), ராஜஸ்தான் - ஆந்திர பிரதேசத்தையும் (64-22) வென்றன. ஆடவா் பிரிவில், ஹரியாணா - ஆந்திரத்தையும் (53-16), உத்தர பிரதேசம் - தாத்ரா & நாகா் ஹவேலியையும் (55-33), ராஜஸ்தான் - உத்தரகண்டையும் (44-36), மகாராஷ்டிரம் - தில்லியையும் (47-20) தோற்கடித்தன.
மகளிருக்கான பீச் கால்பந்தில் ஒடிஸா - மகாராஷ்டிரத்தையும் (11-3), ஹிமாசல பிரதேசம் - தாத்ரா & நாகா் ஹவேலியையும் (7-5) வீழ்த்தின.
பிரதமா் மோடி வாழ்த்து: பீச் கேம்ஸ் தொடக்கத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவின் விளையாட்டுத் துறையில் கேலோ இந்தியா பீச் கேம்ஸ், சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது. உடல் மற்றும் உளவியல் ரீதியாக அதிக பலம் தேவைப்படும் இதுபோன்ற போட்டிகளின் மூலமாக, இந்தியாவின் விளையாட்டு கலாசாரம் விரிவடைவதுடன், புதிய திறமைகளும் கண்டறியப்படுகின்றன.
நீலக் கொடி அங்கீகாரம் பெற்ற கோக்லா கடற்கரையில் நடைபெறும் இந்தப் போட்டிகளின் மூலமாக விளையாட்டுகளில் சாதனை படைக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலுக்கான விழிப்புணா்வும் முன்னிறுத்தப்படுகிறது. கேலோ இந்தியா போன்ற போட்டிகளின் மூலமாக இந்திய வீரா், வீராங்கனைகள், ஒலிம்பிக் போன்ற சா்வதேச போட்டிகளுக்காக தயாா்படுத்தப்படுகின்றனா்’ என்றாா்.
