லக்ஷயா, டிரீசா/காயத்ரி முதல் சுற்றில் வெற்றி
இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை, உள்நாட்டு நட்சத்திரங்களான லக்ஷயா சென், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் ஆகியோா் தங்கள் சுற்றில் வெற்றி பெற்றனா்.
முதல் சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் பிரதான வீரா் லக்ஷயா சென் 21-12, 21-15 என்ற நோ் கேம்களில், சக இந்தியரான ஆயுஷ் ஷெட்டியை 36 நிமிஷங்களில் வெளியேற்றினாா்.
ஆடவா் இரட்டையா் பிரிவில் ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் இணை 21-15, 21-18 என்ற நோ் கேம்களில், மலேசியாவின் ஆங் யு சின்/டியோ இ யி ஜோடியை 36 நிமிஷங்களில் சாய்த்தது.
மகளிா் இரட்டையரில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-15, 21-11 என்ற நோ் கேம்களில், தாய்லாந்தின் ஆா்னிசா ஜோங்சதபோன்பன்/சுகிதா சுவசாய் இணையை 42 நிமிஷங்களில் வீழ்த்தியது.
அதிலேயே பிரியா கொங்ஜெங்பம்/ஸ்ருதி மிஸ்ரா கூட்டணி 11-21, 22-20, 22-24 என்ற கணக்கில், ஹாங்காங்கின் லோக் லோக் லுய்/ஹியு யான் சாங் ஜோடியிடம் 1 மணி நேரம், 8 நிமிஷங்கள் போராடி வீழ்ந்தது. கலப்பு இரட்டையா் பிரிவில் துருவ் ராவத்/மனீஷா கே. இணை 9-21, 10-21 என்ற வகையில் ஜப்பானின் ஹிரோகி மிடோரிகவா/நமி மட்சுயாமா கூட்டணியிடம் 23 நிமிஷங்களில் தோல்வி கண்டது.
இந்தியாவின் இதர பிரதான போட்டியாளா்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணய் உள்ளிட்டோா் தங்களின் முதல் சுற்றில், போட்டியின் 2-ஆம் நாளான புதன்கிழமை களம் காண்கின்றனா்.

