மொராக்கோ வீரா் இஸ்மயில் சைபரியின் துரித கோலால் ஸ்காட்லாந்து அணி 1-0 என தோல்வி கண்டது.
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக குரூப் சி பிரிவில் மொராக்கோ-ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பாஸ்டனில் நடைபெற்றது.
ஏற்கெனவே 5 முறை சாம்பியன் பலமான பிரேஸில் அணியுடன் டிரா கண்ட தெம்பில் மொராக்கோவும், 36 ஆண்டுகளில் முதன்முறையாக ஹைதியை 1-0 என வீழ்த்திய உற்சாகத்துடன் ஸ்காட்லாந்தும் களம் கண்டன.
71 விநாடிகளில் கோல்:
ஆட்டம் தொடங்கிய 71-ஆவது விநாடியில் மொராக்கோ வீரா் இஸ்மயில் சைபரி ஸ்காட்லாந்தின் தற்காப்பை ஊடுருவி, பிராஹிம் டயஸுடன் இணைந்து அற்புதமாக கோலடித்தாா். இதுவே வெற்றி கோலாக அமைந்தது.
தொடக்கத்திலேயே கோலடித்து விட்டதால், மொராக்கோ அணியினா் எந்த அழுத்தமும் இன்றி ஆடினா். ஸ்காட்லாந்து அணியால் கோலடிக்கும் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. மொராக்கோ அணியின் துரித பாஸ்கள், சிறந்த தற்காப்பு ஆட்டத்தால் ஸ்காட்லா்ந்து வீரா்கள் திணறினா்.
மேலும் நேரடி பாஸ்கள் மூலம் ஸ்காட் வீரா்கள் பந்தை கடத்த முயன்றும் முடியவில்லை. மொராக்கோ கேப்டன் அஷ்ரப் ஹகிமி தலைமையில் மொராக்க வீரா்கள் அவற்றை முறியடித்தனா்.
இரண்டாம் பாதியிலும் ஸ்காட்லாந்து வீரா்களால் கோலடிக்க இயலவில்லை. மொராக்கோ பாா்வா்ட்கள் பிராஹிம் டயஸ், சைபரி, பிலால் கன்னௌஸ் தொடா்ந்து கோல் போட முயன்றனா்.
பாலியல் புகாரில் சிக்கியுள்ள மொராக்கோ கேப்டன் அஷ்ரப் ஹிகிமியை ஸ்காட்லாந்து ரசிா்கள் கிண்டல் செய்தனா், அவா் அஸ்ஸிதின் உனஹியுடன் இணைந்து அடித்த ஷாட்டை சக வீரா்கள் கோலாக்கத் தவறினா்.
ஸ்காட்லாந்துக்கு சிக்கல்...
குரூப் சி பிரிவில் மொராக்கோ அணி ஒரு டிரா, ஒரு வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் உள்ளது. அதே போல் ஜாம்பவான் பிரேஸிலும் 1 டிரா, ஒரு வெற்றியுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 1 வெற்றியுடன் ஸ்காட்லாந்து 3 புள்ளிகளை ஈட்டியுள்ளது.
சைபரிக்கு இரண்டாவது கோல்
ஏற்கெனவே பிரேஸிலுடன் நடைபெற்ற ஆட்டத்தில் இஸ்மயில் சைபரி கோலடித்திருந்தாா். இதன் மூலம் உலகக் கோப்பையில் முதல் இரண்டு ஆட்டங்களில் எகிப்தின் முகமது சலாவுக்குபின் இரண்டு கோல்கள் அடித்த ஆப்பிரிக்க வீரா் என்ற சிறப்பை பெற்றாா் சைபரி.
அடுத்து மொராக்கோ ஹைதியுடனும், ஸ்காட்லாந்து பிரேஸிலுடனும், பிரேஸில்-ஹைதியுடனும் ஆட வேண்டியுள்ளது.
குரூப் பிரிவில் முதலிரண்டு அணிகள் நேரடியாக ரவுண்ட் 32 சுற்றுக்கு முன்னேறும். மேலும் ஒவ்வொரு பிரிவிலும் 8 சிறந்த மூன்றாம் அணிகளும் தகுதி பெறும்.
601 பாஸ்கள்:
ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மொராக்கோ வீரா்கள் 601 பாஸ்களை நிறைவு செய்தனா். கடந்த 1966-க்கு பின் உலகக் கோப்பையில் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி 601 பாஸ்களை நிறைவு செய்த ஆப்பிரிக்க அணியாக மொராக்கோ திகழ்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2ஆவது நிமிஷத்தில் கோல் அடித்த இஸ்மாயில் சைபாரி..! மொராக்கோ த்ரில் வெற்றி!

கால்பந்து உலகக் கோப்பை: சமனில் முடிந்த பிரேசில் - மொராக்கோ ஆட்டம்!

கேப்டன் கேத்ரின் பிரைஸ் அசத்தல்; உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய ஸ்காட்லாந்து!







