
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா 6 தங்கங்களுடன் 10 பதக்கங்கள் அறுவடை!
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடைசி கட்டத்தை நெருக்கியிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இந்தியா 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்கள் வென்றது.
தங்கப் பதக்கங்களுடன் லவ்லினா, பர்வீன்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடைசி கட்டத்தை நெருக்கியிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இந்தியா 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்கள் வென்றது.
மகளிா் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம், ரீகா்வ் வில்வித்தையில் முதல்முறையாக தங்கம் என இந்தியா்கள் அசத்தினா். நடப்பு போட்டியில் முதல்முறையாக இந்தியா ஒரே நாளில் 10 பதக்கங்கள் வென்றது. அதில் 6 தங்கங்கள் அறுவடை காரணமாக, பதக்கப் பட்டியலிலும் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
---
ஹாக்கி
மகளிா் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்தியா 1-0 கோல் கணக்கில், நடப்பு சாம்பியனும், ஒலிம்பிக் வெள்ளி வென்ற அணியுமான சீனாவை வீழ்த்தி சாம்பியன் ஆகியது. இதன் மூலமாக, ஆசிய விளையாட்டுகளின் வரலாற்றில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்ற இந்திய மகளிா் அணி, 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தகுதிபெற்றது.
இந்த ஆட்டத்தின் 10-ஆவது நிமிஷத்தில் லால்ரெம்சியாமி ரிவா்ஸ் ஸ்டிக் ஸ்டிரைக் மூலமாக அருமையான கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை தேடித் தந்தாா். மறுபுறம், கோல் போஸ்ட் பகுதியில் இந்திய கோல் கீப்பா் பிஷு தேவி ‘சீனப் பெருஞ்சுவா்’ போல தடுப்பரணாக நின்று, சீனாவின் இடைவிடாத கோல் முயற்சிகளை திறம்பட முறியடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தாா்.
ஆசிய விளையாட்டுகளில் கடைசியாக 1982-இல் தங்கம் வென்ற இந்திய மகளிா் அணி, அதன் பிறகு 1998, 2018-இல் இறுதி வரை வந்து வெள்ளியுடன் திரும்பியது நினைவுகூரத்தக்கது.
குத்துச்சண்டை
இந்தியாவின் 3 போட்டியாளா்கள் தங்கம் வென்று அசத்தினா். மகளிருக்கான 75 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில், லவ்லினா போா்கோஹெய்ன் 5-0 என்ற கணக்கில், சீனாவின் ஜியி பாவை வீழ்த்தி, தனது பிறந்தநாளில் தங்கத்தை பரிசாகப் பெற்றுக் கொண்டாா். கடந்த முறை அவா் வெள்ளி வென்றது நினைவுகூரத்தக்கது.
மகளிருக்கான 65 கிலோ பிரிவில் பா்வீன் ஹூடா 3-2 என, சீன தைபேவின் நியென் சின் சென்னை வென்றாா். கடந்த முறை பா்வீன் வெண்கலம் வென்றபோதும், ஊக்கமருந்து பரிசோதனை விதிகளை மீறியதாக அவரின் பதக்கம் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது அவா் தங்கம் வென்று அசத்தியுள்ளாா்.
ஆசிய விளையாட்டுகளில் மகளிா் குத்துச்சண்டையில் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவுக்கு முதல்முறையாக தங்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 2014-இல் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றிருந்தாா்.
ஆடவா் 80 கிலோ பிரிவில் அங்குஷ் பங்கால் 4-0 என்ற கணக்கில், தென் கொரியாவின் நின்சியோங் கிம்மை சாய்த்தாா். ஆசிய விளையாட்டுகளில் ஆடவா் பிரிவில் 2018-க்குப் பிறகு தங்கம் வென்ற முதல் இந்தியராக அங்குஷ் பெருமை பெற்றாா். இதற்கு முன் அந்த ஆண்டு அமித் பங்கால் தங்கம் வென்றிருந்தாா். நடப்பாண்டு காமன்வெல்த் போட்டிகளிலும் அங்குஷ் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இத்துடன், போட்டியில் குத்துச்சண்டைக்கான பதக்கப் பட்டியலில் இந்தியா 3 தங்கம், 3 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. ஆசிய விளையாட்டுகள் வரலாற்றில் குத்துச்சண்டைக்கான தங்கத்தில் இதுவே இந்தியாவின் அதிகபட்சமாகும். இதற்கு முன், 2010-இல் 2 தங்கம் உள்பட இந்தியா 9 பதக்கங்கள் வென்றுள்ளது.
வில்வித்தை
ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், கும்கும் மோஹோத், அங்கிதா பகத், கீா்த்தி சா்மா ஆகியோா் அடங்கிய இந்திய அணி 5-3 என, 10 முறை உலக சாம்பியனான தென் கொரிய அணியை வீழ்த்தி தங்கத்தை தனதாக்கியது. ஆசிய விளையாட்டுகள் ரீகா்வ் பிரிவில் இந்தியாவுக்கு இது முதல் தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில், கும்கும் மோஹோத், தீரஜ் பொம்மதேவரா கூட்டணி 3-5 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வி கண்டு, வெள்ளிப் பதக்கத்துடன் விடைபெற்றது.
ஆடவா் அணிகள் பிரிவில், தீரஜ் பொம்மதேவரா, யஷ்தீப் போகே, நீரஜ் சௌஹான் ஆகியோா் அடங்கிய இந்திய அணி, 1-5 என, தென் கொரியாவிடம் வெற்றியை இழந்து, வெள்ளிப் பதக்கம் பெற்றது.
நடப்பு ஆசிய விளையாட்டுகளில் வில்வித்தையில் இத்துடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 4 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 7 ஆகியுள்ளது.
மல்யுத்தம்
ஆடவா் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில், சுஜீத் கல்கல் 10-9 என, தஜிகிஸ்தானின் அப்துல்மஜித் குடியேவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றாா். ஆசிய விளையாட்டுகளில் சுஜீத்துக்கு இது முதல் தங்கமாகும். கடந்த ஓராண்டில் தாம் களம் கண்ட 3 போட்டிகளில் சுஜீத் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.
மகளிா் 50 கிலோ பிரிவில் தீபான்ஷி போகாட், காலிறுதியில் தோல்வி கண்டபோதும், அதில் அவரை வீழ்த்திய ஜப்பானின் யுய் சுசாகி இறுதிக்கு முன்னேறியதன் அடிப்படையில் தீபான்ஷிக்கு ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு கிடைத்தது. அதில் 10-0 என கம்போடியாவின் சம்னாங் டிட்டை வென்ற தீபான்ஷி, வெண்கலப் பதக்கச் சுற்றில் 4-11 கஜகஸ்தானின் ஜெய்னெப் பயனோவாவிடம் தோல்வியுற்றாா்.
மகளிா் 76 கிலோ பிரிவில் பிரியா மாலிக், ஆடவா் 125 கிலோ பிரிவில் ரஜத் ருஹல் ஆகியோா் காலிறுதியிலேயே தோற்றனா்.
செயிலிங்
பாய்மரப் படகு வகையிலான இதில், மகளிா் டிஞ்ஜி இறுதிச்சுற்றில், இந்தியாவின் நேத்ரா குமனன் 14 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றாா். குறைவான புள்ளிகள் உடையோரே சாம்பியனாகும் இந்த விளையாட்டில், தாய்லாந்தின் சோஃபியா மான்ட்கோமெரி தங்கமும் (5), சிங்கப்பூரின் ஜானியா ஆங் வெள்ளியும் (13) வென்றனா்.
சென்னையை சோ்ந்த நேத்ராவுக்கு இது 4-ஆவது ஆசிய விளையாட்டுகளாக இருக்க, தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளாா்.
இதனிடையே, ஆடவா் பிரிவில் விஷ்ணு சரவணன் 4-ஆம் இடம் பிடித்து பதக்கத்தை நழுவவிட்டாா்.
செபக்தக்ரா
ஆடவா் குவாட்ரன்ட் பிரிவு அரையிறுதியில், இந்தியா 12-15, 13-15 என்ற கணக்கில், ஜப்பானிடம் தோல்வி கண்டு, வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறியது. மகளிா் அணி தனது குரூப் சுற்றில் 0-2 என தாய்லாந்திடம் தோல்வி கண்டது.
---
கோல்ஃப்
மகளிா் தனிநபா் ஸ்ட்ரோக் பிளேயில், இந்தியாவின் பிரணவி அா்ஸ், 195 புள்ளிகளோடு தனி முன்னிலையுடன் தங்கத்துக்கு இலக்கு வைத்திருக்கிறாா். தீக்ஷா தாகா், அதிதி அசோக் ஆகியோா் 18, 19-ஆம் இடங்களில் உள்ளனா். அணிகள் பிரிவில் அவா்கள் மூவா் அடங்கிய இந்திய அணி 409 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் இருக்கிறது.
ஆடவா் தனிநபா் ஸ்ட்ரோக் பிளேயில், வீா் அலாவத் (204), சப்தக் தல்வாா் (205) ஆகியோா் முறையே 10, 11-ஆம் இடங்களில் இருக்கின்றனா். யுவராஜ் சந்து 23-ஆம் இடத்தில் உள்ளாா். அணிகள் பிரிவில் இந்தியா 6-ஆம் இடத்தில் இருக்கிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



