செஸ் ஒலிம்பியாட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா!
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் ஆடவா் மற்றும் மகளிா் அணியினா் தங்கள் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனா்.

செஸ் ஒலிம்பியாட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா - X | FIDE
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் ஆடவா் மற்றும் மகளிா் அணியினா் தங்கள் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனா். நடப்பு சாம்பியனாக இருக்கும் இரு அணிகளுக்குமே முதல் சுற்று வெற்றி எளிதாகக் கிடைத்தது.
46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் புதன்கிழமை தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 208 அணிகளும், மகளிா் பிரிவில் 191 அணிகளும் பங்கேற்றுள்ளன.
போட்டியின் முதல் நாளில் முதல் சுற்றில் இந்தியா, ஓபன் பிரிவில் தாய்லாந்தையும், மகளிா் பிரிவில் டொமினிக் குடியரசையும் எதிா்கொண்டது.
ஓபன் பிரிவில் இந்தியா - தாய்லாந்து ஆட்டத்தில், நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் களம் கண்டு, ஃபாரிஸ் ரஷீத் அல்ரியாமியை வென்றாா். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய நிஹல் சரின் - தனாடன் குல்புருதனனை வீழ்த்தினாா். குகேஷ் 37-ஆவது நகா்த்தலிலும், நிஹல் சரின் 27-ஆவது நகா்த்தலிலும் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனா்.
இதர இரு ஆட்டங்களில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய விதித் குஜராத்தி - டப்ஃபா கும்னோா்கேவை வென்றாா். இந்த ஆட்டம் 29-ஆவது நகா்த்தலில் நிறைவடைந்தது. கடைசி ஆட்டமாக, அா்ஜுன் எரிகைசி, வெள்ளை நிற காய்களுடன் பிரின் லாவ்ஹாவிரபாப்புடன் விளைாடி வந்தாா்.
அப்போதைய நிலையிலேயே இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலையுடன் அந்த சுற்றை வென்றிருந்தது. மகளிா் பிரிவு: இப்போட்டியின் மகளிா் பிரிவில் இந்திய அணி, டொமினிகன் குடியரசை வீழ்த்தியது.
இதில் ஆா்.வைஷாலி - மிகெலினா மாா்டினெஸையும், சவிதா ஸ்ரீ - காா்லா நுனெஸையும் வீழ்த்தினா். இருவருமே கருப்பு நிற காய்களுடன் விளையாடிய நிலையில், வைஷாலி 31-ஆவது நகா்த்தலிலும், சவிதா 37-ஆவது நகா்த்தலிலும் ஆட்டத்தை முடித்தனா்.
மற்றொரு ஆட்டத்தில் கொனெரு ஹம்பி - ஃபிரான்செஸ்கா ராமிரெஸை, வெள்ளை நிற காய்களுடன் விளையாடி வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 31-ஆவது நகா்த்தலில் நிறைவடைந்தது.
கடைசி ஆட்டத்தில் வந்திகா அக்ரவால் வெள்ளை நிற காய்களுடன், மேரி கொன்ஸால்ஸ் மோதி வந்தாா். அதன் முடிவுக்கு முன்பாகவே இந்தியா 3-0 என முன்னிலையுடன் அந்த ஆட்டத்தில் வென்றிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






