டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளதா?
By DIN | Published On : 20th October 2021 11:48 AM | Last Updated : 20th October 2021 12:07 PM | அ+அ அ- |

வங்கதேச அணி வீரர்கள்
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன.
தகுதிச்சுற்று ஆட்டங்கள் முதல் சுற்று ஆட்டங்களாக அழைக்கப்படுகின்றன. வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா, ஓமன், பப்புவா நியூ கினியா என 8 அணிகள் முதல் சுற்று ஆட்டத்தில் கலந்துகொள்கின்றன. குரூப் ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது வங்கதேச அணி. ஓமனுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதால் வெளியேறுவதிலிருந்து தப்பிப் பிழைத்தது.
குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து அணி 2 வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஓமன் 2-வது இடத்திலும் வங்கதேசம் 3-ம் இடத்திலும் பப்புவா நியூ கினியா 4-ம் இடத்திலும் உள்ளன. இந்த 4 அணிகளில் இரு அணிகள் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும் என்பதால் சிக்கலான நிலைமையில் உள்ளது வங்கதேச அணி.
இதுவரை ஒரு வெற்றியும் பெறாத பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராகக் கடைசி ஆட்டத்தில் விளையாடுகிறது வங்கதேச அணி. இந்த ஆட்டத்தில் 3 ரன்கள் அல்லது அதற்கு அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் வங்கதேச அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். ஓமனுடனான கடைசி ஆட்டத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால் ஓமன் அணி போட்டியிலிருந்து வெளியேறிவிடும்.
ஒருவேளை, பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வங்கதேசம் தோற்றுவிட்டால் வாய்ப்பு இருக்குமா?
ஸ்காட்லாந்திடம் ஓமன் தோற்று, வங்கதேசத்தை விடவும் குறைவான நெட் ரன்ரேட் வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, வங்கதேச அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றால் ஓமன் அணி 13 ரன்கள் வித்தியாசத்திலாவது தோற்கவேண்டும். அப்போது நெட் ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் 12 சுற்றுக்கு வங்கதேச அணி தகுதி பெற்றுவிடும்.
கடைசி ஆட்டத்தில் வங்கதேசம், ஓமன் என இரு அணிகளும் வெற்றிபெற்றால் என்ன ஆகும்? அப்போதும் வங்கதேசம் தகுதி பெறுமா?
கடைசி ஆட்டத்தில் வங்கதேசம், ஓமன் என இரு அணிகளும் வெற்றிபெற்றால் புள்ளிகள் பட்டியலில் வங்கதேசம், ஓமன், ஸ்காட்லாந்து என மூன்று அணிகளும் சம அளவில் புள்ளிகளைக் கொண்டிருக்கும். ஓமன் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்துக்கு இறங்கிவிடும் ஸ்காட்லாந்து. அப்போது வங்கதேசம், ஓமன் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்.