அடிப்படை வசதிகள் இல்லாத சின்னசேலம் ரயில் நிலையம்
கள்ளக்குறிச்சி, ஜூலை 9: அடிப்படை வசதிகள் இல்லாததால் சின்னசேலம் ரயில் நிலைய பயணிகள் அவதிப்படுவது தொடர்கதையாகி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது சின்னசேலம். இவ்வூரின் ரயில் நிலையம் ச


கள்ளக்குறிச்சி, ஜூலை 9: அடிப்படை வசதிகள் இல்லாததால் சின்னசேலம் ரயில் நிலைய பயணிகள் அவதிப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது சின்னசேலம். இவ்வூரின் ரயில் நிலையம் சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த ரயில் நிலையம் 1929-ல் தொடங்கப்பட்டது. மீட்டர்கேஜ் பாதையில் ரயில்கள் இயங்கி வந்தன. அப்போது விருத்தாசலம்-சேலம், சேலம்-விருத்தாசலம், சேலம்-கடலூர், கடலூர்-சேலம் பாசஞ்சர் ரயில்களும், நாகூர்-பெங்களூர், பெங்களூர்-நாகூர் விரைவு பாசஞ்சர் ரயில்களும் இயங்கி வந்தன. சென்னை செல்வதற்கு ஒரு பெட்டி மட்டும் விருத்தாசலத்தில் இணைக்கப்பட்டு சென்று வந்தது.
இந்நிலையில் மீட்டர்கேஜ் பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணி 2005-ல் தொடங்கி 2007 நவம்பரில் முடிவடைந்தது. அதன் பின்னர் சேலம் - விருத்தாசலம் பாசஞ்சர் ரயில் மட்டுமே இயங்கி வருகிறது. ஏற்கெனவே மீட்டர்கேஜ் பாதையில் ஓடிய சேலம்-கடலூர் பாசஞ்சர் ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.
அதுபோல் நாகூர்-பெங்களூர் விரைவு பாசஞ்சர் ரயிலும் இயங்கும் என அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை இயக்கப்படவில்லை.
கணினி மூலம் பயணிகளுக்கு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று பயணிகள் நலச்சங்கத்திற்கு கடிதம் வந்தது. ஆனால் அது ஏட்டளவில் நின்றுவிட்டது.
இந்நிலையில், சின்னசேலம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பயணிகள் அல்லல்படுகின்றனர். சில நேரங்களில் சென்னை செல்லும் விரைவு ரயிலும், பெங்களூர் செல்லும் சிறப்பு ரயிலும் சின்னசேலம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொள்கின்றன. அப்போது பயணிகள் 2-வது பிளாட்பாரம் சென்று ஏறுவதற்கு நடைமேம்பாலம் இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
ரயில் நிலையத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. ஆனால் அது காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது. 6 இடங்களில் குடிநீர் குழாய்கள்தான் உள்ளன. தண்ணீர் வருவது கிடையாது. கழிவறை கட்டடம் மட்டும்தான் உள்ளது. செயல்பாட்டில் இல்லை. இது கட்டணக் கழிவறையாக செயல்பட்டால்கூட பயணிகள் பயனடைவார்கள்.
ரயில் நிலையத்தில் 36 மின் கம்பங்கள் உள்ளன. அதில் சில கம்பங்களில் மட்டும்தான் விளக்குகள் எரிகின்றன.
ரயில் வருகை மற்றும் காலதாமதம் பற்றி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்ய வசதிகள் இல்லை. ரயில் நிலையத்தின் நடைபாதை மேற்கூரை சிறிய அளவில் ஒருபகுதியில் மட்டுமே உள்ளது. பிற இடங்களில் நின்று ரயில் ஏறும் பயணிகள் வெயில் மற்றும் மழையின்போது அவதியுறுகின்றனர்.
இதுகுறித்து பயணிகள் நலச் சங்கத் தலைவர் உஷா முருகேசன் கூறுகையில், 2,3-வது நடைமேடையில் மங்களூர் விரைவு ரயில் நிற்கும்போது முன்னும் பின்னும் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டிகள் நடைமேடைக்கு வெளியே நிற்கின்றன. இதனால் பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்த 2,3-வது நடைமேடை நீளத்தை அதிகப்படுத்த வேண்டும்.
சின்னசேலம் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு எவ்வித வசதியும் இல்லை. கட்டண வசதியுடன் கூடிய நிறுத்துமிடம் இருந்தால் கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம், மருத்துவமனை செல்வோருக்கு வசதியாக இருக்கும் என்றார்.
தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளின் கோரிக்கையை நிர்வாகம் கவனிக்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...