/

செஞ்சி நூலகத்தின் அவலம்: பாழாகும் 30 நூல்கள்!

செஞ்சி, செப். 7: சொந்த இடம் இருந்தும் கட்டட வசதி இல்லாததால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் பாழாகும் நிலைமையில் உள்ளன. மேலும் வாசகர்கள் வசதியாக படித்து பயன்பெறும் வகையில் புதிய கட்டடத்தை கட்ட செஞ்ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:18 am

ஜெ.பாபு

செஞ்சி, செப். 7: சொந்த இடம் இருந்தும் கட்டட வசதி இல்லாததால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் பாழாகும் நிலைமையில் உள்ளன. மேலும் வாசகர்கள் வசதியாக படித்து பயன்பெறும் வகையில் புதிய கட்டடத்தை கட்ட செஞ்சி எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற 11 ஆண்டுகளிலேயே செஞ்சியில் கிளை நூலகம் தொடங்கப்பட்டது. கடந்த 37 ஆண்டுகளாக செஞ்சியில் உள்ள பல்வேறு வாடகை இடத்தில் நூலகம் இயங்கி வந்தது.

இந்நிலையில் செஞ்சி கிளை நூலகம் சொந்த இடத்தில் இயங்க வேண்டும் என்று தனக்கு சொந்தமான 11 சென்ட் நிலத்தை முன்னாள் செஞ்சி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், அதிமுக மாநில பொதுக் குழு உறுப்பினருமான வீ.ரங்கநாதன் தானமாக வழங்கினார்.

இந்த 11 சென்டில் 3 சென்ட் இடத்தில் ரூ.1.48 லட்சம் செலவில் 1993-ம் ஆண்டு கட்டடம் கட்டப்பட்டு 1994-ம் ஆண்டு திறக்கப்பட்டது.ஆனால் கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களில் மேல் தளம் வலுவிழந்து மழை பெய்தால் ஒழுக ஆரம்பித்துவிடுகிறது.

முறையாக மணல் மற்றும் சிமென்ட் கலவை சேர்க்கப்படவில்லை. ஒன்றும் பாதியுமாக, அரை குறையாக முக்கால்வாசி மணலை கலந்து சரஸ்வதி குடியிருக்கும் கல்விக் கூடமாக விளங்கக் கூடிய நூலகக் கட்டடம் என்று கூட பாராமல், தரமற்று கட்டியதன் விளைவாக மழைக் காலங்களில் கட்டடம் முழுக்க ஒழுக ஆரம்பித்து புத்தகங்கள் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டது.

இது குறித்து ஜனவரி 2008-ம் ஆண்டு தினமணியில் செய்தி வெளியானது. இதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட நூலகத் துறை கட்டி முடிக்கப்பட்ட 14 ஆண்டுகளிலேயே 15.1.2008-ல் நூலகத்தை பராமரிக்க உள்ளதாகக் கூறி மீண்டும் செஞ்சி கிளை நூலகத்தை வாடகைக் கட்டடத்தில் இயங்க அனுமதி அளித்தது.

ஆனால் 3 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழைய கட்டடமும் பாழடைந்து விட்டது. தற்போது உள்ள நூலகம் கிருஷ்ணாபுரம் கோவிந்தசாமி தெருவில் உள்ள வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.

தற்போது இயங்கி வரும் வாடகைக் கட்டடம் மேல் தளம் சிமென்ட் பெயர்ந்து படிக்கும் வாசகர் தலையில் விழும் நிலையில் உள்ளது.

மேலும் குறுகிய சந்து என்பதால் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

காற்றோட்டம் இல்லாமல் வெளிச்சம் இன்றி இருண்டுக் கிடப்பதால் படிப்பதற்கு வாசகர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

தற்போது இந்த கிளை நூலகம் 3,683 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இன்டர்நெட் வசதியும் உள்ளது. வாசகர்கள் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்த செலவில் நகல் எடுக்கும் கருவியும் உள்ளது.

பழம் பெரும் வரலாற்று நூல்களில் இருந்து தற்போது உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புக்கான புத்தகங்களும் உள்ளன.

போதிய இடவசதி இல்லாததால் பயன்பாட்டுக்கு இல்லாமல் உள்ளது. தரமற்று பாழடைந்த பழையக் கட்டடத்தை இடித்து விட்டு 11 சென்ட் இடத்தில் வாசகர்கள் பயன்பெறும் வகையில் இயற்கையான காற்றோட்டத்தோடும், வெளிச்சத்தோடும் கூடிய குடி நீர் வசதி, கழிப்பிடவசதி மற்றும் வாகனங்களை நிறுத்தும் இடம் ஆகியவற்றை ஏற்படுத்தி, தமிழக அரசின் உதவியோடு, நவீன வசதியுடன் புதிய கட்டடத்தை பெரிய அளவில் கட்ட செஞ்சி எம்.எல்.ஏ.அ.கணேஷ்குமார் முயற்சி செய்து நூலக கட்டடத்தை கட்ட வேண்டும் என செஞ்சி நகர மக்களும், வாசகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.