/

செஞ்சிக்கோட்டையில் பசுமை புல் தோட்டங்கள்

செஞ்சி, மார்ச் 30: தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பசுமை புல்தோட்டம் போல செஞ்சிக் கோட்டையிலும் பசுமை புல்தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேலும் அழகுற செஞ்சிக் கோட்ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:02 am

ஜெ.பாபு

செஞ்சி, மார்ச் 30: தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பசுமை புல்தோட்டம் போல செஞ்சிக் கோட்டையிலும் பசுமை புல்தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேலும் அழகுற செஞ்சிக் கோட்டை பொலிவு பெறும்.

 தொல் பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது செஞ்சிக்கோட்டை. இந்தக் கோட்டையை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வெங்கட்ராமர் ஆலய கோபுரமும் ஆயிரங்கால் மண்டபமும் புதுப்பிக்கப்பட்டது.

 புதுப்பிக்கப்படாத ராஜகோபுரம்: ஆனால் வெங்கட்ராமர் ஆலய ராஜகோபுரம் மட்டும் புதுப்பிக்கபடாமல் உள்ளதால் சிதைந்து வரும் நிலையில் கோபுரம் உள்ளது. இந்த ராஜ கோபுரத்தை இந்திய தொல்லியல் துறை புதுப்பிக்க வேண்டும் என செஞ்சி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 மேலும் கோயில் வெளி பிரகாரத்தை சீரமைத்து புல் வெளி பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சிவன்கோயில் மற்றும் செஞ்சிக் கோட்டையில் உள்ள கல்யாண மஹால், யானைக்குளம், குதிரை லாயம், நெற்களஞ்சியம் ஆகிய பகுதிகளை சுற்றிலும் புல்வெளி அமைத்து பூந்தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.

 மைசூர் அரண்மனை மற்றும் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பூந்தோட்டம் போன்று, செஞ்சியில் பசுமை புல் தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 பராமரிப்பற்ற மதில் சுவர்கள்: புல் தோட்டம், பூந்தோட்டம், கட்டட பராமரிப்பு பணி, சர்க்கரை குளத்தை அழகுபடுத்தியது, நவீன கழிப்பறை என்று தொல்பொருள் துறையின் பணி நீண்டுகொண்டு சென்றாலும், செஞ்சிக்கோட்டையின் பிரமாண்டமான மதில் சுவர்கள் பராமரிப்பின்றி முள்செடி, கொடி, புதர் மண்டி, மரங்கள் வளர்ந்து காட்சி அளிக்கிறது.

 கோட்டைக்கு அழகே மதில் சுவர்தான். ஆனால் இந்த மதில் சுவர்கள் சில இடங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் தொல்பொருள் துறை தனி கவனம் செலுத்தி மதில்சுவரை பராமரிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 புகைப்பட அரங்கு அமைக்கக் கோரிக்கை:

 மேலும் செஞ்சிக்கோட்டையை சுற்றிபார்க்க வரும் சுற்றுலா பயணிகளில் முதியோர்கள், பள்ளி சிறுவர்கள் பெரும்பாலானோர் மலை மீது ஏறினாலும் முழுவதுமாக அனைத்தையும் பார்க்கமுடியாத நிலை உள்ளது. எனவே தொல்பொருள் துறையினர், ராணிக்கோட்டையில் உள்ள பல்வேறு இடங்களையும் மற்றும் வேலூர் வாயில், பாண்டிச்சேரி வாயில், வெங்கட்ராமர் ஆலயம், வீரஆஞ்சநேயர் ஆலயம், சர்க்கரை குளம், செட்டிகுளம், ராஜா கோட்டையில் உள்ள மண்டபங்கள், கோயில்,குளங்கள், பீரங்கிமேடை, சுனை நீர், இழுவைபாலம் உள்ளிட்ட இடங்களையும் படம் பிடித்து செஞ்சிக்கோட்டையில் உள்ள மிக முக்கிய இடங்களில் புகைபட கண்காட்சி அரங்கை அமைக்க வேண்டும் என்றும் இதன் மூலம் மலை மீது சென்று நேரில் பார்க்க முடியாதவர்கள் படத்தை பார்த்து ரசிக்க முடியும் என்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறை மிகவும் சிரமப்பட்டு பராமரிப்புப் பணிகளை செய்து வந்தாலும் தமிழக அரசு செஞ்சிக்கோட்டையை சுற்றுலா மையமாக அறிவிக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.