சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் பணியில் கேரள அரசு தீவிரம்: அமராவதி விவசாயிகள் அதிர்ச்சி

உடுமலை அருகே, அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக கருதப்படும் பாம்பாற்றின் அருகே, ரூ. 24 கோடி மதிப்பீட்டில் அணை கட்டும் பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

News image

அணைப் பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ள தளவாடப் பொருள்கள். (வலது) அணைப் பகுதியில் நிறுத்தப்பட்ட இயந்திரங்கள்.

Updated On :29 ஜனவரி 2024, 4:19 pm IST

உடுமலை அருகே, அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக கருதப்படும் பாம்பாற்றின் அருகே, ரூ. 24 கோடி மதிப்பீட்டில் அணை கட்டும் பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் அமராவதி பாசன விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், கரூர் வரையில் உள்ள நூற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்கென ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது வரை, அமராவதி அணைக்கு ஆண்டு முழுவதும் சுமார் 7 டிஎம்சி தண்ணீரே வந்து கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் 5 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. பெரும்பாலான ஆண்டுகளில் பருவமழையும் விவசாயிகளுக்கு கை கொடுப்பதில்லை.
இந்நிலையில், 5 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க அமராவதி அணையின் மேற்புறத்தில் அப்பர் அமராவதி அணை கட்ட வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக-கேரள எல்லையில் உள்ள மறையூர் அருகே காந்தலூர் ஊராட்சிக்கு உள்பட்ட பட்டிச்சேரி என்ற இடத்தில் ரூ. 24 கோடி செலவில் புதிய அணை ஒன்றைக் கட்ட முந்தைய காங்கிரஸ் அரசு திட்டமிட்டது. அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் பாம்பாற்றின் அருகே 75 அடி உயரத்திலும், 440 அடி அகலத்திலும் அணையின் கட்டுமானப் பணிகள் அப்போது துவக்கப்பட்டன. இந்த அணையின் மூலம் சுமார் 2 டிஎம்சி தண்ணீரைத் தேக்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கேரள அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியது. முந்தைய கேரள அரசின் இந்தச் செயல் அமராவதி அணை பாசன விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதை அடுத்து கேரள அரசு அணையின் கட்டுமானப் பணிகளைத் தாற்காலிகமாக நிறுத்திக் கொண்டது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அணையின் கட்டுமானப் பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்தப் பகுதியில் கல், ஜல்லி, மணல் ஆகியவை குவிக்கப்பட்டு இரவு, பகலாக பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அமராவதி பாசன விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அமராவதி ராமகுளம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.டி.மாரியப்பன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
காவிரி நடுவர் மன்றம், மத்திய சுற்றுச்சூழல் துறை, நீர்வளம் மற்றும் மின்சாரத் துறை ஆகியவற்றின் ஒப்புதலைப் பெறாமலேயே கேரள அரசு இந்த அணையைக் கட்டி வருகிறது. தேனாறு, சின்னாறு, பாம்பாறு ஆகியவைதான் அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாகும். இதில் பாம்பாறு பிரதானமாகும். ஏற்கெனவே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் புதிதாக ஓர் அணையைக் கட்ட கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி வருகிறது.
இந்நிலையில் தற்போது அமராவதி அணையின் மேற்புறத்தில் பாம்பாற்றின் அருகே அணை கட்டும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மின்சாரம் தயாரிக்கவும், விவசாயப் பணிகளுக்காகவும்தான் அணை கட்டுகிறோம் என கேரள அரசு சொல்வதை நம்ப முடியாது. தனியார் குளிர்பான நிறுவனங்களிடம் பேரம் பேசி வரும் கேரள அரசு அவர்களின் வசதிக்காகவே இந்த அணையைக் கட்ட முடிவு செய்துள்ளது.
இதனால் அமராவதி அணையை நம்பி வாழும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால் 55 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், குடிநீரை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களும் பாலைவனமாகி விடும். மேலும், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நம்பியுள்ள 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி விடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.