/

வெங்கய்ய நாயுடுவுக்கு தமிழக முதல்வர், எம்பிக்கள் நேரில் ஆதரவு

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடுவை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த

News image
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடுவை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி,
Updated On :29 ஜனவரி 2024, 4:31 pm

DIN

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடுவை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறி ஆதரவைத் தெரிவித்தனர்.
தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை பதவியேற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அதன் பிறகு, மாலையில் தில்லி ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சாலையில் உள்ள எம்.வெங்கய்ய நாயுடு இல்லத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அதிமுக நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் பி.வேணுகோபால், மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் மற்றும் எம்பிக்கள் பலரும் உடன் சென்றனர். அவர்கள் எம்.வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்துக் கூறி சிறிது நேரம் கலந்துரையாடினர்.
இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிச்சாமி கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எம்.வெங்கய்ய நாயுடுவுக்கு எங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி, எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கலந்து பேசி வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவு அளிக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
தற்போது அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம். தென் மாநிலத்தைச் சேர்ந்த அவர், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒட்டுமொத்த அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெங்கய்ய நாயுடுவுக்கு ஒருமனதாக ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்' என்றார் முதல்வர் பழனிசாமி.
எம். வெங்கய்ய நாயுடு கூறுகையில், 'குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எனக்கு தமிழக முதல்வரும், அவர் சார்ந்த கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. குடியரசுத் துணைத் தலைவர் பதவியானது அரசியலுக்கு அப்பாற்றப்பட்ட அரசிலமைப்பு பதவியாகும். நாடாளுமன்றத்திலும், பொதுவாழ்விலும் எனக்குள்ள அனுபவத்தைக் கொண்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சி செய்வேன். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா என் மீது மரியாதையும், பாசமும் கொண்டிருந்தார். வரக்கூடிய காலங்களில் என்னால் முடிந்த ஆதரவையும், உதவியையும் தமிழகத்திற்கும், முதல்வருக்கும், அவர் சார்ந்த நாடளுமன்ற உறுப்பினர்களுக்கும் செய்வேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.