

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்கீழ் 50 சதவீத மானியத்தில் வாகனம் வாங்குவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க திங்கள்கிழமை (பிப். 5) பெண்கள் அதிக அளவு குவிந்தனர். சென்னையில் மட்டும் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் இந்த விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
வேலைக்குச் செல்லும் பெண்கள், திருநங்கையர் தங்கள் பணியிடங்களுக்கு சென்று வருவதற்கு ஏதுவாக அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியம் அல்லது வாகனத்தின் விலையில் இருந்து 50 சதவீதம் நிதியுதவி ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2 2-ஆம் தேதி முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி மையங்களில் இத்திட்டத்துக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதற்கு ஓட்டுநர் பழகுநர் உரிமம் அவசியம் என்பதால் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
இந்தநிலையில், இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க திங்கள்கிழமை (பிப்.5) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்ததால் விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் அந்தந்த அலுவலகங்கள் முன்பு ஏராளமான பெண்கள் குவிந்தனர். சென்னையைப் பொருத்தவரை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் உள்பட நகரின் பல பகுதிகளில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
ஒரே நாளில் 10,751 பெண்கள் விண்ணப்பம்: அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்கீழ் சென்னையில் மட்டும் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் 10,751 பெண்கள் திங்கள்கிழமை ஒரே நாளில் விண்ணப்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் உள்பட மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் திங்கள்கிழமை பெண்களின் கூட்டம் அலைமோதியது.
மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை (பிப்.6) முதல் தொடங்குகிறது. இதையடுத்து மானியம் பெறும் பெண்களின் பட்டியலை வரும் 15 -ஆம் தேதிக்குள் தயார் செய்து அளிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு இருசக்கர வாங்குவதற்காக 50 சதவீத மானியத்தை அரசு அளிக்கும். இந்தத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று (பிப்.24) தொடங்கி வைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.