லலிதா ஜுவல்லரியில் கொள்ளைப்போன நகைகளில் 5 கிலோ நகை மீட்பு: முக்கியக் குற்றவாளி கைது

திருச்சியில் லலிதா ஜுவல்லரி கடையில் ரூ. 12.31 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு போன வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியை திருவாரூரில்
மணிகண்டனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4.5 கிலோ தங்க நகைகள்.
மணிகண்டனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4.5 கிலோ தங்க நகைகள்.
Published on
Updated on
2 min read


திருச்சியில் லலிதா ஜுவல்லரி கடையில் ரூ. 12.31 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு போன வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியை திருவாரூரில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த 4.5 கிலோ நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல  நகைக் கடையில் ரூ. 12.31 கோடி மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகள் புதன்கிழமை திருட்டுபோனது. 

இது தொடர்பாக நகைக்கடை மேலாளர் ஜா. நாகப்பன் கொடுத்த புகாரின்பேரில் திருச்சி, கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து 7 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.  

மேலும், நகைக்கடை ஊழியர்கள் 190 பேர் மற்றும் காவலாளிகள் 12 பேரிடம் நடந்த முதல் கட்ட விசாரணையைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் விசாரணை நடந்தது. 

இவை தவிர நகைக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும், நகைக்கடையைச் சுற்றியும், நகரில் உள்ள முக்கியச் சாலைகளிலும் உள்ள சுமார் 700 கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டும் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே நகைக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், தொலைக்காட்சிகள் மற்றும் கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.  

திருவாரூரில் முக்கியக் குற்றவாளி கைது: இந்நிலையில் திருவாரூரில் உள்ள கமலாம்பாள் நகரில் நகர போலீஸார் மேற்கொண்ட வாகன தணிக்கையின் போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இரு சக்கரவாகனத்தை நிறுத்தினர். போலீஸாரை கண்டதும் அதில் வந்த ஒருவர் தான் வைத்திருந்த பையுடன் தப்பியோடினார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் மற்றொருவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர், திருவாரூர் மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(32) என்பதும், அவர் திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையில் நகைகளை திருடிவிட்டு தனக்கான பங்கை வாங்கி கொண்டு வந்ததும் தெரிய வந்தது.  இதைத் தொடர்ந்து அவரது பையில் வைத்திருந்த 4.5 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்து, அதனை ஆய்வு செய்தபோது தங்க நகைகளில் இருந்த பார் குறியீடும், திருட்டுபோன திருச்சி நகைக்கடையின் நகையும் ஒன்றாக இருப்பதை போலீஸார் உறுதி செய்தனர்.

இதனையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்து திருவாரூர் நகர காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடியவர் திருச்சி சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என தெரியவந்தது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இவ்வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டதையறிந்த திருச்சி தனிப்படை போலீஸார் துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையில் திருவாரூர் விரைந்துள்ளனர். 

தப்பியோடிய சுரேஷ் பிரபல வங்கிக் கொள்ளையன் திருவாரூரைச் சேர்ந்த முருகனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 பேரிடம் விசாரணை: தப்பியோடிய சுரேஷின் தாயார் கனகவல்லி, சகோதரிகள் உட்பட 5 பேரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற போலீஸார், நகைகள் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருட்டு போன நகைகளின் விவரம்: தங்க நகை 27.680 கிலோ கிராம் (3,460 சவரன்) மதிப்பு ரூ. 11.07 கோடி, டைமன்ட் மட்டும் 145 கேரட் மதிப்பு ரூ. 72.91 லட்சம், தங்கம் மற்றும் வைரத்தாலான நகைகள் 1,160 கிலோ கிராம் மதிப்பு ரூ. 46.40 லட்சம், 92 கிராம் பிளாட்டினம் மதிப்பு ரூ. 4.63 லட்சம்  என மொத்தம் ரூ. 12.31 கோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com