பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி
தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கான முன்மொழிவுகள் குறுகிய காலத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. எனது கோரிக்கையை ஏற்று, ஆறு மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு ஒரே நேரத்தில் ஆறு அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று நிகழ்வாகும். இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.