ஜூன் 15-ம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

ஜூன் 15-ம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.
ஜூன் 15-ம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: பொது முடக்கக் காலத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 15-ம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்று கருத்துக் கூறியுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை  வரும் ஜூலை 2 ஆவது வாரத்தில்  நடத்தலாமா என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்,  இதுகுறித்து அரசின் கருத்தை கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை பிற்பகல் 2.30 மணிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பக்தவச்சலம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த பொதுத் தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 9 லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். மேலும் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 41 ஆயிரம் மாணவர்களும், பொதுமுடக்கம் காரணமாக தேர்வு எழுத முடியாத 36 ஆயிரத்து 89 மாணவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வையும் எழுத உள்ளனர். மேலும் இந்த தேர்வுக்கான பணிகளில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 623 ஆசிரியர்களும், 22 லட்சத்து 43 ஆயிரம் ஆசிரியரல்லாத பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே வரும் ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற உள்ளதாக அறவிக்கப்பட்டுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த பொதுத் தேர்வை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜூன் 15 ஆம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது. 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. கரோனா தொற்று பரவல் குறைந்த பின் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தலாம் என கருத்து தெரிவித்து,  வரும் ஜூலை 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து அரசின் கருத்தை கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், இன்றைய விசாரணைக்கு அரசு தலைமை வழக்குரைஞர் 2.30 மணிக்கு ஆஜராகவில்லை என்றால், 10ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, மாணவர்கள், ஆசிரியர்கள் நலனில் தமிழக அரசு எவ்வாறு ரிஸ்க் எடுக்கிறது. 9 லட்சம் மாணவர்கள் வாழ்க்கை தொடர்பான விஷயம் இது. பொது முடக்கக் காலத்திலேயே பொதுத் தேர்வை நடத்த வேண்டியதற்கு அவசியம் உள்ளது என நினைக்கிறீர்களா என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பியிருந்தது.

மேலும், பள்ளிகள் திறப்பதை ஜூலையில் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசின் தெரிவித்திருக்கும் நிலையில், அதனை மீறி, ஜூன் மாதத்தில் பொதுத் தேர்வு நடத்தப்படுவது ஏன்? கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கக் காலத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை தமிழக அரசே மீறலாமா?

லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் எப்படி ரிஸ்க் எடுப்பீர்கள்? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழக முதல்வர் பழனிசாமியுடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com