ஏழைகள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு - குறு - நடுத்தரத் தொழில் முனைவோர், மற்றும் நடுத்தர மக்களுக்கு, உண்மையிலேயே உதவிடும் வகையிலும், அடிப்படைப் பொருளாதாரத்தை ஊக்குவித்திடும் முறையிலும், ரொக்கமாக எவ்வித நிவாரண உதவியும் (Cash Relief) அளிக்காமல் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டது. பொருளாதார ரீதியாக, கீழ் படிநிலைகளில் உள்ள 50 சதவீத குடும்பங்களுக்கு, ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7500 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்பதையோ, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மறு வாழ்விற்கு தேவையான பண உதவி செய்திட வேண்டும் என்பதையோ, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை 200 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பதையோ, சிறிதும் காதில் போட்டுக் கொள்ளவில்லை மத்திய அரசு. தற்போது தினமும் அதிகரித்து வரும் கரோனா நோய் தொற்றை தடுக்கும் எவ்வித ஆக்கபூர்வமான பாதுகாப்புத் திட்டங்களும் இன்றி- மொத்தமாக தளர்த்தி- பெயரளவிற்கு ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது வேதனைக்குரியது. சென்னையில் பெருகி வரும் நோய் பாதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக ஊரடங்கினை படிப்படியாகத் தளர்த்தி வரும் மாநில அதிமுக அரசு, மக்களைப் பாதுகாக்கவும் திட்டமின்றி, கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசின் சார்பில் முழுமையான ஏற்பாடுகள் ஏதுமின்றி, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்காமலும்; “ஊரடங்கிற்குப் பிறகான நிவாரணம் மற்றும் பொருளாதாரத் திட்டங்களும்” ஏதுமின்றி, மத்திய பாஜக அரசின் கையை எதிர்பார்த்து, செயலிழந்து நிற்கிறது. கரோனா பேரிடரால் 2020-2021 ஆம் ஆண்டிற்கான, மத்திய - மாநில அரசுகளின் நிதி நிலை அறிக்கைகளே செல்லும் திசை தெரியாமல் திகைத்து நிற்கின்றன. கரோனா நோய் அதிகம் பாதித்த மாநிலங்களில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது மாநிலமாகவும், அதிக உயிரிழப்பு நிகழ்ந்ததில் தென்னகத்தில் முதல் மாநிலமாக இடம்பெறும் அளவிற்கு “கரோனா நோயை” கட்டுப்படுத்துவதில் அதிமுக ஆட்சி தோல்வி கண்டு விட்டது. தமிழ்நாட்டில் உள்ள கரோனா நோய் பாதிப்பில் சென்னை பத்தாயிரத்தையும் தாண்டி முதலிடம் வகிக்கிறது. கட்டுக்கடங்காமல் தினமும் நோய்த் தொற்று பரவி வருவதையும், பரிசோதனை விபரங்களை மாவட்ட வாரியாக வெளியிட மறுத்து வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றுவதையும் மறுத்து வருவதை, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் அதிர்ச்சியுடன் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. அதிமுக அரசின் சார்பில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை; ஊரடங்கு அறிவிப்பதில் குழப்பம்; ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி அளிக்கவில்லை; தங்கள் உயிரை பணயம் வைத்து, மக்களைக் காப்பாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தமிழக காவல்துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும்- விவசாயத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும்- பாதிப்பிற்கும், வாழ்வாதார இழப்பிற்கும் உள்ளான யாருக்கும் உதவி செய்யாமல் கைவிரித்தது; அதிவிரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் ஊழல்; “ஊரடங்கிற்குள் ஓர் ஊரடங்கை” அவசரகதியில் அறிவித்தது, தாய்மார்கள் கண்ணீர் சிந்தி - கைகூப்பி எதிர்த்தும், பிடிவாதமாக உச்சநீதிமன்றம் வரை சென்று ‘டாஸ்மாக்’ கடைகளைத் திறந்தது, அரசியல் கட்சிகளை அழைத்து- ஜனநாயக ரீதியில் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்காமல் புறக்கணித்தது, கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தையும் பரவலாக்காமல், மையப்படுத்தி முக்கியத்துவம் பெற முயற்சி செய்வது, என அனைத்து முனைகளிலும் தோல்வி கண்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி என்பதை இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது. ஊரடங்கிற்குப் பிறகு மாநிலத்தின் நிதி ஆதாரம், பொருளாதார மீட்சி, தொழில் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் ஏதுமின்றி, “விளம்பரத்திற்காக” மட்டுமே குழுஆலோசனைக் கூட்டங்களை நடத்தி; தினமும் பரவி தீவிரமாகி வரும் கரோனா நோய்த் தொற்று பற்றியும் - துயரத்தில் மூழ்கியுள்ள மக்களின் நிலை பற்றியும், கண்ணோட்டமின்றி இருப்பது கண்டனத்திற்குரியது. ஆகவே தமிழ்நாட்டில் - குறிப்பாக சென்னையில், கரோனா நோயைக் கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்ற உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. வேறு மாநிலங்களிலும், உலகத்தில் பல்வேறு இடங்களிலும் பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்திற்கு பாதுகாப்பாக திரும்ப மத்திய- மாநில அரசுகள் கட்டணம் ஏதுமின்றி, உரிய ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்போர்க்கு மத்திய அரசின் சார்பில் தலா 7500 ரூபாயும்; மாநில அரசின் சார்பில், பாதிக்கப்பட்டோர்க்கு 5000 ரூபாயும்; வழங்கிட வேண்டும் எனவும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மத்திய - மாநில அரசுகளை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.