தொல்லியல் படிப்பில் தமிழ் விடுபட்டது ஏன்? - மத்திய அரசுக்கு மதுரைக்கிளை சரமாரி கேள்வி!

தொல்லியல் துறை பட்டயப் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழியை மறந்து அறிவிப்பாணை வெளியிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரைக்கிளை நீதிமன்றம்
மதுரைக்கிளை நீதிமன்றம்

தொல்லியல் துறை பட்டயப் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழியை மறந்து அறிவிப்பாணை வெளியிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் குமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் மத்திய தொல்லியல் துறை கல்லூரியில், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,"இந்திய வரலாறு, தொல்லியல்துறை, மானிடவியல்  ஆகிய துறைகளில் முதுகலைப்பட்டம் மற்றும் சமஸ்கிருதம், பாலி, மற்றும் அரபு மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதியில் பழமையும், பெருமையும் மிக்க செம்மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, கல்வித்தகுதியில் செம்மொழியான தமிழ் மொழியையும் இணைக்க உத்தரவிட வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தார்

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பாக வழக்குரைஞர் வாதிடுகையில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பாக நேற்று செம்மொழியான தமிழ் மொழியையும் இணைத்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மத்திய அரசுக்கு பல்வேறு சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

ஏன் அறிவிப்பாணை வெளியிடும் போதே செம்மொழிகளில் முதன்மை மொழியான தமிழ் மொழியை இணைக்கவில்லை. இந்த அறிவிப்பாணையை தயார் செய்த அதிகாரி யார்? ஒரு அதிகாரி தொல்லியல் துறையில் அறிவிப்பாணை தயாரிக்கிறார் என்றால் குறைந்தபட்சம் செம்மொழிகள் எந்த மொழி என்று தெரியாத அளவிற்கு அதிகாரி செயல்படுவாரா? அந்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய அரசு சார்பாக தற்போது தமிழ் மொழியை இணைத்து வெளியிட்டுள்ளதாக கூறுகிறீர்கள். ஆனால் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்த பின்புதான் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் ஆர்வலர்களும் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய பின்தான் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மொழிகளைப் பற்றிய பிரச்சினைகளைக் கையாளும் போது மொழிகளுடன் உணர்வுடன் கவனமாக செயல்பட வேண்டும். இந்தியாவில் மாநிலங்கள் ஜாதி, மத அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

மொழிகளிலே பழமையான மொழியான தமிழ் மொழியை மறந்து தொல்லியல் துறை சார்பாக அறிவிப்பை வெளியிட்டது ஏன்? ஒருவேளை இதற்கான எதிர்ப்பு குரல் எழுப்பவில்லை என்றால் தமிழ்மொழி இணைக்கப்பட்டு இருக்குமா என்று கேள்வி எழுகிறது. இந்தியாவே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு உள்ள சூழலில் ஒரு மொழியை தவிர்த்து அரசின் அறிவிப்பாணை வெளியிடுவதில் நோக்கமென்ன?

பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் அதிகாரி மீது  என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com