2011 ஆம் ஆண்டு முதல் இந்த அரசின் முயற்சிகளால், ஊரகப் பொருளாதாரத்தின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில், கால்நடைத் துறையின் பங்கு பெருமளவில் அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல், மொத்தம் 1,06,277 கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு 1,06,277 கறவை மாடுகளும் 12,44,010 கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு 49,76,040 ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு முதல், 3,60,620 ஏழைக் குடும்பங்களுக்கு 1,09,40,500 கோழிகள் வழங்கப்பட்டுள்ளன. பெருகியுள்ள கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, தீவனப் பயிர், தீவனம், உயர்தர கால்நடைப் பராமரிப்பு மற்றும் நிலையான சந்தைப்படுத்துதல் போன்றவை மேம்படுத்தப்பட்டு, அவை தொடர்ந்து கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.