இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திமுக கட்சியல்ல; அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி: முதல்வர் பழனிசாமி

திமுக கட்சியல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் ஸ்டாலின் தலைவர்,  என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

News image
திமுக கட்சியல்ல; அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி: முதல்வர் பழனிசாமி
Updated On :21 ஜனவரி 2021, 8:01 am

DIN

திமுக கட்சியல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் ஸ்டாலின் தலைவர், குடும்ப உறுப்பினர்கள் தான் இயக்குநர்கள். வேறு யாரையும் இயக்குநர்களாக போட மாட்டார்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஆற்றிய உரையில், 
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற காரணத்தினால், இன்றைக்கு ஸ்டாலின் அவர்கள் ஊர், ஊராக சென்று பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார். ஊடகங்கள் வாயிலாக பொய்யான அறிக்கையினை வெளியிட்டு வருகிறார். கிராம சபை கூட்டம் என்ற பெயரிலே, அவர்கள் தயார் செய்த பெண்களை அமர்த்தி அவதூறு பரப்பி வருகிறார். இதே போன்று கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலே திண்ணையில் அமர்ந்து மனு பெற்றார். அதற்கு ஏதும் செய்தாரா? இல்லை. இவ்வாறு அப்பாவி பொதுமக்களை அமரவைத்து அரசுக்கு எதிரான பொய்யான பிரசாரத்தை பரப்பி வருகிறார்.

பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை குழப்பி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலே தி.மு.க. வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற பின் தமிழ்நாட்டு மக்களுக்காக நாடாளுமன்றத்திலே ஏதேனும் குரல் கொடுத்தார்களா? இல்லை. அதே போன்றதொரு உத்தியை கையாண்டு, பொய்யான வாக்குறுதிகள் மூலம் இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறார் ஸ்டாலின். அது ஒரு போதும் நடக்காது.

தற்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. மக்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள். 

இன்றைக்கு உதயநிதி “நாங்கள் ஆட்சிக்கு வந்தால்” என்று காவல்துறை உயர் அதிகாரியையே மிரட்டுகிறார். காவல் துறை உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகளையே மிரட்டுகிறார் என்றால், சாதாரண மக்களின் நிலமையை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அரசு எடுத்த சீரிய நடவடிக்கையினால் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதின் காரணமாக, இன்றைக்கு தேசிய அளவில் பல்வேறு துறைகளில் விருதுகளைப் பெற்று இருக்கிறது.

உணவு தானிய உற்பத்தியில் தொடர்ந்து முதலிடத்திற்கான கிருஷி கர்மான் விருது. இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்வதில் தமிழகம் முதல் மாநிலம். உறுப்பு மாற்றும் அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6 வருடங்களாக தேசிய விருதை பெற்றுள்ளோம். அதேபோன்று, சமூக நலத்துறை, நீர்மேலாண்மை, மின்சாரத்துறை, உள்ளாட்சி துறை போன்ற பல்வேறு துறைகளிலும் விருது பெற்று, தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

குடிமராமத்து திட்டத்தின் மூலமாக ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, மழைக்காலங்களிலே ஒரு சொட்டு நீரைக் கூட வீணாக்காமல் நாங்கள் தேக்கி வைத்திருக்கின்றோம். நதிகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி பொழிகின்ற மழை நீர் முழுவதும் தேக்கி வைக்கப்பட்டு, விவசாயத்திற்கும் மக்களுக்கும் தேவையான நீர் கிடைக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

வேளாண் பணிகள் சிறப்பாக நடைபெற அம்மாவின் அரசு விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வாங்க மானியம், சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம், இடு பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்தது. இப்படி விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. என்றைக்கும் விவசாயிகளை பாதுகாக்கின்ற அரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

நான் ஒரு விவசாயி என்றால் ஸ்டாலினால் ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

இன்னல்களை உடைக்கின்ற அரசு எங்களுடைய அரசு. நிவர் புயல், புரெவி புயல், தொடர் கனமழையால் விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் எல்லாம் நீரிலே மூழ்கி பாதிக்கப்பட்டது. அப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுப்பதற்காக நான் நேரடியாக தில்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து நிவாரணம் நிதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதையும் ஸ்டாலின் கிண்டலாக பேசுகிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றுவதற்காக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை பார்த்தார் என்று சொல்கிறார். ஆட்சியை காப்பாற்றுவதற்கு இன்னும் 5 ஆண்டுகளா இருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் வர இருக்கிறது.

அவருடைய தந்தை கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தில்லிக்கு எப்போது செல்வார் என்றால் தன் குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு பதவி அதிகாரம் வேண்டும் என்பதற்கு தான் தில்லி செல்வார். நாட்டு மக்களின் பிரச்சனைக்காக தில்லி செல்வாரா என்றால், கிடையவே கிடையாது. 

நாங்கள் ஆட்சியை பெரிதாக நினைவிக்கவில்லை. மக்களை தான் பெரிதாக நினைக்கிறோம். மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் தான் ஆட்சியை ஏற்படுத்துகிறார்கள். எனவே, ஆட்சியை கொண்டு வந்த மக்களுக்கு எங்களால் இயன்ற அளவுக்கு நன்மைகளை செய்து கொண்டே இருப்போம். 

திமுக குடும்ப கட்சி. அவர்கள் குடும்பத்திலே இருக்கின்றவர்கள் தான் பதவிக்கு வர முடியும். வேறு யாரும் பதவிக்கு முடியாது. அப்படி தான் இன்றைக்கு அந்த கட்சி போய் கொண்டிருக்கிறது. அது கட்சியல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் ஸ்டாலின் சேர்மன், குடும்ப உறுப்பினர்கள் தான் டைரக்டர்கள். வேறு யாரையும் டைரக்டராக போட மாட்டார்கள். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஸ்டாலின் போகிறார், உதயநிதி போகிறார், கனிமொழி போகிறார், தயாநிதி மாறன் போகிறார். மற்றவர்கள் யாரும் திமுக கட்சியிலே இல்லை பாருங்கள். 
 ஆனால் அதிமுகவை பொறுத்தவரைக்கும் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக ஆக முடியும். இது ஒரு ஜனநாயகக் கட்சி. யார் உழைக்கின்றார்களோ, யார் தலைமைக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக ஏதாவது பதவியை அடைந்தே தீருவார்கள். வேறு எந்த கட்சியிலாவது வர முடியுமா. 

திமுக எம்பிக்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள். இவர்கள் எதற்காக பதவிக்கு வருகிறார்கள் என்றால், இன்னும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தான். ஆனால் அதிமுகவினர் நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும், அதன் மூலமாக மக்கள் நன்மை பெற வேண்டும். அந்த ஒன்றிற்காகதான் இன்றைக்கு பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

நான் முதல்வராக வந்த போது, இங்கே இருக்கின்ற அதிமுகவினரும் பொதுமக்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டை புதிய மாவட்டமாக அறிவித்த அரசு எங்களுடைய அரசு.

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் வைத்த கோரிக்கை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற விதமாக 6 மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை தோற்றுவித்திருக்கிறேன். 

ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று அரசு விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றோம். ஆகவே, மக்களுடைய உணர்வை அறிந்த அரசு தமிழக அரசு.

திருப்போரூர் தொகுதியில் 7 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக மாற்றியுள்ளோம். 4 உயர்நிலை பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றியுள்ளோம். அந்தப் பகுதிகளிலே உள்ள ஏழை எளிய மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயிலக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கி தந்திருக்கின்றோம். 10 அம்மா மினி கிளினிக்கை இந்த தொகுதியில் கொடுத்திருக்கிறோம். அதேபோல திருப்போரூர் பகுதியில் 42 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். 13 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 22 ஏரிகள் தூர் வாரப்பட்டு இருக்கிறது. எங்களுடைய அரசு பல்வேறு திட்டங்களை இந்தப் பகுதியில் செயல்படுத்தி வருகிறது. சாலைகளை அகலப்படுத்தி கொண்டு இருக்கிறோம்.

ஒரு வேதனையான விஷயம். ஸ்டாலின், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தொகுதியான எடப்பாடி மற்றும் தேனியில் பெண்களை வைத்து மக்கள் கிராம சபை கூட்டம் என்ற ஒன்றை நடத்தி வருகிறார்.

எவ்வளவு திட்டமிட்டு செயல்படுகிறார் என்று பாருங்கள். அங்கே போய் அமர்ந்து கொண்டு, அங்கு இருக்கிற பெண்களுக்கு துணை முதலமைச்சர் மீது குற்றச்சாட்டை சொல்ல சொல்கிறார். கரோனா பொதுமுடக்கக் காலக்கட்டத்தில் தமிழகத்திற்கு வர முடியாமல் தில்லியில் சிக்கி தவித்த சுமார் 400 இஸ்லாமிய பெருமக்களை தன்னுடைய சொந்த செலவில் இரயிலிலே அழைத்து வந்து அவர்களை வரவேற்று அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்த தலைவர் ஓபிஎஸ், கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்கினார். அங்கே ஒரு பெண்மணி ஒரு தவறான கருத்தை சொல்லி, ஸ்டாலின் அதற்கு பதில் சொல்லி கொண்டிருக்கிறார். ஸ்டாலின் ஒரு நாகரிகமில்லாத அரசியல் கட்சி தலைவர். வேண்டுமென்றே துணை முதலமைச்சர் மீது பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார். இதன்மூலம் அரசியல் ஆதாயம் பார்க்க நினைக்கிறார் ஸ்டாலின். 

வருகின்ற 27-ஆம் தேதி சென்னை, மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அருகில் ஜெயலலிதாவின் நினைவிடம் காலை 11 மணிக்கு திறக்க இருக்கின்றோம். அந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.