ஆதரவற்ற குழந்தைகளுக்கு வைப்புத் தொகை திட்டம்: முதல்வா் தொடக்கி வைத்தார்

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் பெயரில் வைப்புத் தொகை வைக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு வைப்புத் தொகை திட்டம்: முதல்வா் தொடக்கி வைத்தார்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு வைப்புத் தொகை திட்டம்: முதல்வா் தொடக்கி வைத்தார்
Updated on
2 min read


சென்னை: கரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரண உதவித்தொகை வழங்கினார்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்திடும் வகையில், அந்த குழந்தைகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு, கரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு 3 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை, கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்பது போன்ற பல்வேறு நிவாரண உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்புகளை செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டது.

அவற்றில் முக்கியமான நிவாரண உதவிகளான கரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்து, அக்குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகையை அக்குழந்தைக்கு வட்டியோடு வழங்கும் வகையில், மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், 5 குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்தமைக்கான சான்றிதழ்களை, அக்குழந்தைகளின் பாதுகாவலர்களிடம் வழங்கினார்.

மேலும், கரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக 3 இலட்சம் ரூபாய் வழங்கிடும் வகையில், பெற்றோர்களில் ஒருவரை இழந்து தவிக்கும் 5 குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின் தந்தை / தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக தலா 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழக முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர். லால்வேனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com