இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்: அக்.6, 9-ல் வாக்குப்பதிவு

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.
2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்
2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்


2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று கூறினார்.

இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதியும் நடைபெறவுள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

நாளை மறுநாள் முதல் (செப்.15) உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கவுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிகிறது.

செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். செப்டம்பர் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம்.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்.

27 ஆயிரம் பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல்:

14,573 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 27,000 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பதால் வாக்குச்சீட்டு முறையில் மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 வகையான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன. 

நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் காவலர்கள் ஈடுபடவுள்ளனர்.  

முதற்கட்ட தேர்தலில் 41 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். 2-ம் கட்ட தேர்தலில் 34 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள்.

தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல்:

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றிய குழு துணைத்தலைவர் பதவிகளுக்கும் அக்டோபர் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கும் அக்டோபர் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

நேரடி தேர்தலில் வென்றவர்கள் அக்டோபர் 20-ம் தேதி பதவி ஏற்பார்கள். நேரடி தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் வாக்களிப்பார்கள்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக பூர்வாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com