மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இன்று அதிகாலை பெயா்ச்சி அடைந்தாா்: பக்தர்கள் தரிசனம்

குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இன்று வியாழக்கிழமை அதிகாலை 4.16 மணிக்கு பிரவேசம் செய்தார். 

News image

குருபெயர்ச்சியை முன்னிட்டு மூலவர் குருபகவான் சன்னதியில் இன்று அதிகாலை நடந்த மகா தீபாராதனை.

Updated On :14 ஏப்ரல் 2022, 3:59 am


நீடாமங்கலம்: குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இன்று வியாழக்கிழமை அதிகாலை 4.16 மணிக்கு பிரவேசம் செய்தார். இதனை முன்னிட்டு நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சோழ வளநாட்டில், திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடி என்னும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. 
சோழ வள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98 ஆவது தலமாக விளங்குகிறது. 
திருவாருர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குரு பரிகாரஸ்தலமாகிய ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது. 

தல வரலாறு: பார்க்கடல் கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்து ரட்சித்தமையால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயரும் ஏற்பட்டது. அசுரர்களால் தேவருக்கு நேர்ந்த இடுக்கண்களை களைந்து காத்தமையால் இத்தல விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் என பெயர் உண்டாயிற்று. அம்மையார் தவம் செய்து இறைவனை திருமணம் செய்து கொண்ட சிறப்பை உடையது. அம்மை திருமணம் நடந்த இடத்திற்கு இன்று திருமணமங்கலம் எனப் பெயர் வழங்கப்பெறுகிறது. மத்தியார்சுனம் ஆகிய திருவிடைமருதூர் மகாலிங்க பெருமானுக்கு பரிவாரத்தலமாக விளங்குகிறது.  பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதாக சாயரட்சைக்கு உகந்த திருத்தலமாக விளங்குகிறது. 

Story image

குருபகவான் சன்னதியில் பக்தர்கள் கூட்டம்.

முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சர் சிவ பக்தரான அமுதோகர் என்பவரால் நிர்மானிக்கப்பட்டதாகும் இத்திருக்கோயில். அமைச்சர் செய்த சிவ புண்ணியத்தில் பாதியேனும் மன்னருக்கு தத்தம் செய்து தரும்படி கேட்க ,மறுத்த அமைச்சருக்கு சிரச்சேதம் ஏற்பட்டது. இதன் விளைவால் அரசனுக்கு தோஷங்கள் ஏற்பட இத்தல முர்த்தியை வணங்கி வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்ததாக வரலாறு கூறுகிறது. விஸ்வாமித்திரர், அஷ்டதிக்கு பாலகர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகர்பிரம்ம மகரிஷி மற்றும் ஆதிசங்கரர் ஆகியோர் பூஜித்த திருத்தலம் ஆகும். அம்மையின் திருமணத்திற்கு வந்த திருமால், பிரம்மா, இலக்குமி, கருடன், ஐயனார், வீரபத்திரர் முதலானோர் தத்தம் பெயரால் லிங்கங்கள் நிறுவி பூஜித்துவழி பட்டத் தலம். 

முசுகுந்த சக்கரவர்த்தி, சுவாசனன் மற்றும் சுந்தரர் வழிபட்ட தலமாகும். திருஞானசம்பந்தரால் பதிகம் பெற்றது.  அப்பர் அடிகளால் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் சேர்த்துப் பாடல் பெற்ற சிறப்புடையது. 

திருஞானசம்பந்தர் தமது பாடல்களால் இத்தலத்தை சிறப்பித்து இரண்டாம் திருமுறையில் பாடியுள்ளார். குருபெயர்ச்சி விழா - வரலாற்றுச்சிறப்புமிக்க இக்கோயிலில் ஆண்டு தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும்  நாளில் குருபெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

இவ்வாண்டும் அருள்மிகு குருபகவான் இன்று 14 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4.16 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனைமுன்னிட்டு  புதன்கிழமை மாலை கலங்காமற்காத்த வினாயகருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

அதனைத்தொடர்ந்து 108 கலசாபிஷேக யாகபூஜைகளும் குருபகவானுக்கு 108 கலச அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து குருபகவானுக்கு தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.  இன்று அதிகாலை குருபகவானுக்கு மகா அபிஷேகம் ,தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டது. குருபகவான் பெயர்ச்சியடைந்த அதிகாலை 4.16 மணிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

Story image

தங்ககவச அலங்காரத்தில் குருபகவான்.

இதில், முன்னாள் அமைச்சர், நன்னிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.காமராஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர். குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து வைத்து பக்தர்களுக்கு பிரசாதங்களை கோயில் அர்ச்சகர்கள் சுவாமிநாத சிவாச்சாரியார், ஞானஸ்கந்த சிவாச்சாரியார் ஆகியோர் வழங்கினர். 

கலங்காமற்காத்தவினாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வர பகவான் சன்னதிகளில் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 

சிறப்பு ஏற்பாடுகள்:  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்திருந்தனர். திருவாரூர்  மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. 

விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார், அறநிலைய உதவி ஆணையர் ஹரிஹரன்,உதவி ஆணையர் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலர் தமிழ்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.  குருபெயர்ச்சி 2 வது கட்ட லட்சார்ச்சனை வரும் 18 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.