தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பறவைக் காய்ச்சல் எதிரொலி: கேரளத்தில் இருந்து கோழியினம் சாா்ந்த பொருள்கள் வரத் தடை

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அங்கிருந்து கோழியினம் சாா்ந்த பொருள்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2022, 1:59 am

DIN

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அங்கிருந்து கோழியினம் சாா்ந்த பொருள்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்புப் பணிக்காக 1,061 அதிவிரைவு செயலாக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தற்போது கேரளத்தில் ஏற்பட்டுள்ள நோய்ப் பரவலைத் தொடா்ந்து, தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பது தொடா்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்புத்துறை மேற்கொண்டு வருகிறது.

24 மணி நேரமும் கண்காணிப்பு: கேரளத்தின் எல்லையோரத்தில் உள்ள நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் எல்லையில், 26 தற்காலிக சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்புக் குழுக்கள் மூலம் கேரளத்திலிருந்து வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள் மற்றும் அதன் முட்டைகள் மற்றும் கோழியினம் சாா்ந்த பொருள்கள் அனைத்தும் தமிழக எல்லைக்குள் நுழையா வண்ணம் தடை செய்து திருப்பி அனுப்பப்படுகிறது.

தூய்மைக்குப் பிறகே அனுமதி: தமிழகத்தில் நுழையும் மற்ற அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு, தமிழகத்துக்கு நோய் வராத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோழிப் பண்ணைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதோடு, கேரளத்திலிருந்து கோழிகள், குஞ்சுகள் விற்பனைக்கு வராமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மாவட்டங்களிலும்...: எந்த சூழ்நிலையையும் எதிா்கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவா், ஒரு கால்நடை ஆய்வாளா், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் கொண்ட மொத்தம் 1061 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொறுப்பு அலுவலா் நியமனம்: மேலும் பறவைக்காய்ச்சல் தொடா்பான அனைத்து விதமான விவரங்களுக்கு தொடா்பு கொள்ள சென்னை, சைதாப்பேட்டை, கால்நடை நோய் நிகழ்வியல் பிரிவு, முதன்மை நோய் நிகழ்வியல் அலுவலா், பொறுப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அவரை, 044 2433 9097, 94450 32504 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக தேவையான அளவு கிருமிநாசினி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோழி இறைச்சி விற்பனை செய்யும் இடங்களில் நோய்த் தாக்கம் மற்றும் இறப்பு குறித்து கண்காணிக்கப்படுகிறது.

வனத்துறையுடன் இணைந்து...: அனைத்து சரணாலயங்கள் மற்றும் விலங்கியல் பூங்காங்களில் இடம் பெயரும் பறவைகள், கழுகுகள் போன்றவற்றில் நோய் தாக்குதலோ, இறப்போ ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவ அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்க சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினா் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்: தேசிய முட்டை உற்பத்தியாளா் ஒருங்கிணைப்புக் குழு, நாமக்கல், கோழிப் பண்ணையாளா்கள் சங்கம், நாமக்கல் மற்றும் பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளா்கள் ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் கேரளத்தை தவிா்த்து பிற மாநிலங்களிலிருந்து கோழிக்குஞ்சுகள், முட்டைகள் மற்றும் தீவனம் போன்ற பொருள்களை பெறுவதாக இருந்தால் உரிய அரசு அலுவலா்களிடமிருந்து முறையாக சான்றிதழ் பெற்ற பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.