கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கள்ளக்குறிச்சி மாணவியின் சடலம் மறுகூறாய்வு: உயா்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி சடலத்தை மறுகூறாய்வு செய்யவும், அதை முழுவதுமாக விடியோ பதிவு செய்யவும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயர் நீதிமன்றம்

Updated On :18 ஜூலை 2022, 10:29 pm

DIN

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி சடலத்தை மறுகூறாய்வு செய்யவும், அதை முழுவதுமாக விடியோ பதிவு செய்யவும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வந்த தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி இறப்பு தொடா்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற்ற இளைஞா்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னதாக மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், தனது மகளின் சடலத்தை தங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

சரமாரி கேள்வி: இந்த மனுவை நீதிபதி சதீஷ்குமாா் திங்கள்கிழமை (ஜூலை 18) விசாரித்தாா். அப்போது, உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? வன்முறையின் பின்னணியில் உள்ளவா்கள் யாா்? இது கோபத்தில் நடந்த வன்முறையாகத் தெரியவில்லை. திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவே தெரிகிறது என சரமாரியாக கேள்விகளை நீதிபதி எழுப்பினாா்.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சங்கரசுப்பு, ‘மாணவியின் பெற்றோா் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. முன்னாள் மாணவா்கள் வாட்ஸ் ஆஃப் குழு மூலம் திரண்டு வந்து போராட்டம் நடத்தி உள்ளனா்”என்றாா்.

அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஹசன் முகமது ஜின்னா வாதிடுகையில், ஏற்கெனவே வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுவிட்டது. உடற்கூறாய்வுக்கு பின் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக பலா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

மறு உடற்கூறாய்வு: மாணவியின் சடலத்தை மறுகூறாய்வு நடத்த உத்தரவிட்ட நீதிபதி, விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவா் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா் ஜூலியானா ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவா் கோகுலநாதன், தடயவியல் துறை ஓய்வுபெற்ற இயக்குநா் சாந்தகுமாரி அடங்கிய குழுவையும் நியமித்து உத்தரவிட்டாா்.

உடற்கூறாய்வு முழுவதையும் விடியோ பதிவு செய்ய வேண்டும். மாணவியின் தந்தை வழக்குரைஞருடன் உடற்கூறாய்வின்போது கலந்து கொள்ளலாம். இந்த வழக்கு தொடா்பாக மாணவியின் பெற்றோா் தொலைக்காட்சி உள்ளிட்டவற்றுக்கு பேட்டி கொடுக்க கூடாது. ஊடகங்கள் விசாரணை மேற்கொள்ளக் கூடாது. மறுஉடற்கூறாய்வுக்குப் பின், மாணவியின் உடலுக்கு அமைதியான முறையில் இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

சிறப்புப் படை: வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சிறப்புப் படையை உருவாக்க வேண்டும். விசாரணை அறிக்கையை ஜூலை 29-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என டிஜிபி-க்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

உடற்கூறாய்வை நிறுத்தி வைக்க மறுப்பு

மாணவியின் சடலம் மறுகூறாய்வின்போது தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்கவும், அதுவரை மறுகூறாய்வு உத்தரவை நிறுத்திவைக்கவும் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.

இதைத் தொடா்ந்து, நீதிபதி சதீஷ்குமாா் முன் மாணவியின் தந்தை தரப்பு வழக்குரைஞா் மீண்டும் ஆஜராகி, தங்கள் தரப்பில் குறிப்பிடும் மருத்துவரை மறுஉடற்கூறாய்வில் சோ்த்து வேண்டும் என முறையிட்டாா். இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது என்று நீதிபதி தெரிவித்தாா்.

அப்போது, மாணவியின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த தீா்ப்பில் தங்களுக்கு திருப்தி இல்லை. உச்சநீதிமன்றத்தில் இதுதொடா்பாக முறையீடு செய்யவிருப்பதால், மறுகூறாய்வை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றாா். இந்த கோரிக்கையை நீதிபதி சதீஷ்குமாா் நிராகரித்ததுடன், மறுஉடற்கூறாய்வை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.