மாணவர்களுக்கான புத்தகத் தேடலில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்!

மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர், மாணவர்களுக்கான புத்தகங்களை வாங்கிச் சென்றது புத்தக ஆர்வலர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புத்தக அரங்கிற்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தில் வந்த இடையன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி கணித ஆசிரியர் வி.கே.சந்திரசேகரன்.
புத்தக அரங்கிற்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தில் வந்த இடையன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி கணித ஆசிரியர் வி.கே.சந்திரசேகரன்.

ஈரோடு: மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இணைப்புச்  சக்கரம் பொருத்தப்பட்ட இருச்சக்கர வாகனத்தில் ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் மாணவர்களுக்கான புத்தகங்களை வாங்கிச் சென்றது புத்தக ஆர்வலர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புத்தகத்தைக் கண்டாலே சில மாணவர்களுக்கு வெறுப்பு ஏற்படுவதற்குக் காரணம் நமது கல்வி முறையும், கற்பிக்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும்தான் காரணம் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. ஆனால் ஆசிரியரையும் புத்தகங்களையும் இரு கண்களாக பாவிக்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாற்றுத்திறனாளி ஆசிரியர்.

ஈரோடு இடையன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் வி.கே.சந்திரசேகரன். இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளியான இவர் தனது இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தில் ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு சனிக்கிழமை காலையிலேயே வந்து ஒவ்வொரு அரங்கிற்கு முன்பும் வாகனத்தை நிறுத்தி பள்ளி மாணவர்கள் படிக்கும் வகையில் எளிமையான புத்தகங்களை வாங்கினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஈரோடு புத்தக திருவிழாவிற்குத் தொடர்ந்து வருகிறேன். கடந்த ஆண்டு வரை எழுமாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றினேன். அப்பள்ளியில் பணியாற்றிய காலத்தில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவிற்கு வந்து மாணவர்கள் படிக்க கணித மேதை ராமானுஜர் குறித்க புத்தகங்கள், பாரதியார் கவிதைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை வாங்கிச்செல்வேன்.

அதை நான் வகுப்பு எடுக்கும் மாணவர்களுக்கு கொடுத்து நேரம் கிடைக்கும்போது வாசிக்கச் சொல்வேன்.  ஒரு மாணவர் புத்தகத்தை முழுமையாக வாசித்து முடித்தவுடன் மற்றொரு மாணவருக்கு கொடுப்பேன். இதன் மூலம் மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் மேம்படுவதோடு, புத்தகம் ஒருவரோடு மட்டும் முடங்கிவிடாது, மாணவர்கள் அனைவருக்கும் பலன் அளிக்கும்.

பணி மாறுதலில் ஈரோடு இடையன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வந்தேன். இங்குள்ள மாணவர்களிடமும் வாசிப்புப் பழகத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக புத்தகத் திருவிழாவில் இந்த ஆண்டும் புத்தகங்களை வாங்கியுள்ளேன்.

6 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை எப்படியாவது புத்தகம் படிக்க வைத்துவிட வேண்டும் என்ற முனைப்போடு புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். மாணவர்களிடம்  வாசிப்புப் பழக்கம் மேம்பட்டால் பாடப் புத்தகங்களைப் புரிந்துகொண்டு படிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். எவ்வளவு பக்கங்கள் உள்ள புத்தகங்களாக இருந்தாலும் அவற்றின் மையக் கருத்து என்ன என்பதை உள்வாங்கிக்கொள்ளும் திறன் மேம்படும்.

புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டாத குழந்தைகளிடத்திலும் புத்தக ஆர்வத்தைத் தூண்ட வேண்டுமென்றால் இலக்கியம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் புத்தகங்களைப் படிக்க வைக்க வேண்டும். கூடவே, பெற்றோர்களும் சேர்ந்து படித்து பிள்ளைகளுடன் தங்கள் வாசிப்பு அறிவைப் பகிர்ந்துகொண்டால் பாடப் புத்தகத்தில் உள்ள கடினமான பகுதிகளையும் எளிமையாகப் புரிந்துகொள்ளும் பக்குவம் ஏற்படுவதோடு புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் அவர்களிடம் ஆழமாக ஊன்றிவிட முடியும் என்றார்.

இதுகுறித்து புத்தக விற்பனையாளர்கள் கூறியதாவது:குழந்தைகளின் திறன்களில் மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். கற்பனைத் திறனை மேலும் மேலும் விரிவுபடுத்திக்கொண்டிருக்கும் குழந்தைகளே எதிர்காலத்தில் பெரும் சாதனையாளர்களாக உருவெடுக்கிறார்கள். எல்லாக் குழந்தைகளும் சமமான அளவில் கற்பனைத் திறன் கொண்டிருந்தாலும் வீட்டுச் சூழலும், கல்விச் சூழலும் சமூகமும் அந்தத் திறனைப் போகப்போகக் குறைத்துவிடுகின்றன. புத்தகங்கள், முக்கியமாக கற்பனையும் மாயாஜாலங்களும் நிரம்பியிருக்கும் கதைகள், குழந்தைகளின் கற்பனையை அதிகப்படுத்தக்கூடியவை.

இதனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் நல்ல புத்தகங்களையும் கதைகளையும் குழந்தைகளிடம் எடுத்துச் சென்றால் அவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் சமூக மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்துத் திறன்களிலும் சிறந்து விளங்குவார்கள். இப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்க சந்திரசேகரன் போன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com