தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்!

தமிழக காவல்துறையின் 31வது தலைமை இயக்குநராக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
சங்கர் ஜிவால் (கோப்புப் படம்)
சங்கர் ஜிவால் (கோப்புப் படம்)

சென்னை: தமிழக காவல்துறையின் 31வது தலைமை இயக்குநராக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
  
தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, அந்த பணியிடத்துக்கு தமிழக காவல்துறையின் 31வது தலைமை இயக்குநராக சங்கர் ஜிவால் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர் பெ.அமுதா பிறப்பித்துள்ளார்.

சைலேந்திரபாபு ஓய்வையொட்டி, 6 மாதங்களுக்கு முன்பு இருந்தே தமிழக காவல்துறையின் அடுத்த தலைமை இயக்குநர் பணியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வந்தது.

தமிழக காவல்துறையில் டிஜிபி ரேங்கில் உள்ள சஞ்சய் அரோரா, பிரஜ்கிஷோர் ரவி, சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ் குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால், அமரேஷ் புஜாரி, ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் உள்ளிட்ட 13 பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்தன.

இவர்களில் ஒருவரை தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராக தேர்வு செய்யும் வகையில் தில்லி மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தில் ஆலோசனைக் கூட்டம் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய உள்துறை உயர் அதிகாரிகள், மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள், தமிழக அரசின் தலைமை செயலர் வெ.இறையன்பு, உள்துறை முதன்மை செயலர் பெ.அமுதா, தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பணிமூப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் தமிழக கேடர் அதிகாரியான தில்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஊர்க்காவல் படை டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து மூவரில் ஒருவரை தேர்வு செய்துக் கொள்ளும்படி மத்திய அரசு உள்துறை, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. இதில் சங்கர் ஜிவாலை தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராக தமிழக அரசு தேர்வு செய்து, தற்போது அறிவித்துள்ளது.

புதிய தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலுக்கு தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

யார் இந்த சங்கர் ஜிவால்?

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சங்கர் ஜிவால். பி.இ. மெக்கானிக்கல் பட்டதாரியான சங்கர் ஜிவால், அதில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். சங்கர் ஜிவால் தனது தாய் மொழியான குமானி, தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை பெற்றவர்.

கல்லூரி படிப்புக்கு பின்னர் சங்கர் ஜிவால் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்திலும் (செய்ல்), பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் (பெல்) நிறுவனத்திலும் சிறிது காலம் பொறியாளராக பணிபுரிந்தவர்.

கடந்த 1990ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, தமிழக காவல்துறையில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்த சங்கர் ஜிவால், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் மண்டல இயக்குநர், திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர், உளவுப்பிரிவு டிஐஜி, ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி, ஆயுதப்படை ஏடிஜிபி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். சிறந்தப் பணிக்காக  2 முறை குடியரசுத் தலைவர் பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com