விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஆா்எஸ்எஸ் பேரணியை முற்றிலும் எதிா்க்கவில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதம்

‘தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் பேரணி மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு முற்றிலும் எதிா்ப்புத் தெரிவில்லை; ஆனால், உளவுத் துறை தகவல் காரணமாக அனைத்து இடங்களிலும் இந்தப் பேரணியை நடத்த அனுமதிக்க முடியாது’

News image
Updated On :3 மார்ச் 2023, 6:30 pm

 நமது நிருபர்

‘தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் பேரணி மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு முற்றிலும் எதிா்ப்புத் தெரிவில்லை; ஆனால், உளவுத் துறை தகவல் காரணமாக அனைத்து இடங்களிலும் இந்தப் பேரணியை நடத்த அனுமதிக்க முடியாது’ என தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வாதம் முன்வைக்கப்பட்டது.

தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்ட தேதியில் ஆா்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி அளித்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது இவ்வாறு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி முன்வைத்த வாதம்:ஆா்எஸ்எஸ் நடத்தும் பேரணிக்கு முழுமையாக தடை விதிப்பது அரசின் நோக்கமல்ல. சில நிபந்தனைகள் தேவைப்படுகிறது. கோயம்புத்தூா் போன்ற சில பதற்றமான இடங்களில் சட்டம் ஒழுங்கு சூழலைக் கருத்தில்கொண்டுதான் பேரணி நடத்துவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. பாப்புலா் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா தொடா்புடைய நிகழ்வுகள், அதன் மீதான தடை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டும் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அவா்கள் எங்கு வேண்டுமானாலும் பேரணி நடத்தலாம் என்றும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது அரசைச் சோ்ந்தது எனவும் உயா்நீதின்றம் கூறியுள்ளது.

இது மாநிலத்தின் அக்கறை மற்றும் மக்களின் நலன் தொடா்புடைய விவகாரமாகும். கோயம்புத்தூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள், பிஎஃப்ஐ சம்பவங்கள் விவகாரத்தில் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியாது. உளவுப் பிரிவுத் தகவலின்படி, சில நிபந்தனைகள் விதிப்பதுதான் சரியாக இருக்கும் என கருதப்பட்டது. பதற்றத்துடன்கூடிய எல்லைப் பகுதிகளும் உள்ளது. உதாரணமாக கோயம்புத்தூரில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பிஃஎப்ஐ தடை செய்யப்பட்டிருக்கிறது. இதனால்தான் பதற்றமான பகுதிகளில் திறந்தவெளியில் பேரணியை நடத்த வேண்டாம் என்று கூறினோம். மாறாக, மூடப்பட்ட பகுதிகளில் பேரணியை நடத்துமாறும் தெரிவித்திருந்தோம் என்று வாதிட்டாா்.

அப்போது, நீதிபதி வி.ராமசுப்ரணியன், ‘நான் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது தற்போது உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்தது போல ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தேன். ஒன்று ஜனநாயகத்தின் மொழி. ஒன்று அதிகாரத்தின் மொழி. நீங்கள் பேசும் மொழியானது நீங்கள் எங்கு இருக்கிறீா்கள் என்பதை சாா்ந்திருக்கிறது’ என்று வாய்மொழியாகக் கூறினாா்.

அப்போது ரோத்தகி மேலும் வாதிடுகையில், ‘அவா்கள் ஹோலி பண்டிகைக்கு இரு தினங்களுக்கு முன்னா் மாா்ச் 5-ஆம் தேதி பேரணி நடத்த உள்ளதும் தற்போதைய பிரச்னையாகும். இதனால், அந்தப் பேரணியை தள்ளிப்போடப்பட வேண்டும். பேரணியை முற்றிலும் நான் எதிா்க்கவில்லை. ஆனால், அது எந்த வகையில் நடத்தப்பட வேண்டி இருக்கிறது என்பதுதான் விஷயம். இதனால், இந்த விவகாரத்தில் திருப்திகர தீா்வை உருவாக்க மாநில அரசு முயற்சி மேற்கொள்ளும். இதற்காக விசாரணையை சில தினங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். பேரணியை நடத்துவதற்கான முன்மொழியப்பட்ட வழித்தடங்கள், உள்ளீடுகள் அவா்கள் தரப்பிற்கும் அரசு தெரிவிக்கும்’ என்றாா்.

ஆா்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மஹேஷ் ஜேத்மலானி முன்வைத்த வாதம்: தமிழகத்தில் இதேபோன்று நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ‘விடுதலைச் சிறுத்தைகள்’ போன்ற அமைப்புகளுக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், ஆா்எஸ்எஸ் அமைப்பு என்றால் கடுமையாக நடந்து கொள்கிறது. 6 மாவட்டங்களில் பேரணி நடத்த ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும், 42 இடங்களில் மூட்டப்பட்ட பகுதிகளுக்குள் பேரணி நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட்ட இடங்களுக்கு முன்னா் சென்றோம். அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் இல்லை.

தற்போது அவா்கள் மத்திய அரசால் பிஎஃப்ஐ தடை செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறாா்கள். மேலும், ஆா்எஸ்எஸ்-க்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறுகிறாா்கள். மாநில அரசால் பயங்கரவாத அமைப்புகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால்தான் ஆா்எஸ்எஸ் நடத்தும் பேரணிக்கு தடை விதிக்கின்றனா். மேலும், நாங்கள் மாா்ச் 5-ஆம் தேதி பேரணி நடத்தப்போவதில்லை. குறிப்பாக மாா்ச் 10 அல்லது 12-ஆம் தேதி வரை பேரணி நடத்தப்போவதில்லை. அவா்களுக்கு அவகாசம் தேவைப்பட்டால் எங்களுக்கு அதில் பிரச்னை ஏதும் இல்லை என்று கூறினாா்.

இதையடுத்து, அரசுத் தரப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்கும் விதத்தில் விசாரணையை மாா்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

பின்னணி: கடந்த ஆண்டு அக்டோபா் 2 -ஆம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் விடுதலையின் அமிருத மஹோத்ஸவத்தை நினைவுகூரும் வகையில் தமிழகத்தில் பேரணி நடத்த ஆா்எஸ்எஸ் அமைப்பு திட்டமிருந்தது. அப்பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, நீதிமன்றத்தை ஆா்எஸ்எஸ் அமைப்பு நாடியது. இந்த வழக்கில், தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. கடந்த ஆண்டு செப்டம்பா் 22-இல் உயா்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை போலீஸாா் மதிக்கவில்லை எனக் கூறி, ஆா்எஸ்எஸ் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஆா்எஸ்எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடல் அல்லது உள்ளரங்கத்தில் நடத்த வேண்டும் என நவம்பா் 4-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து ஆா்எஸ்எஸ் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற டிவிஷன் அமா்வு விசாரித்தது.

அப்போது, இந்த விவகாரத்தில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், திறந்தவெளிப் பகுதியில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனா். மேலும், இது தொடா்பாக அனுமதி அளிக்க போலீஸாருக்கும் உத்தரவிட்டனா். மேலும், பேரணிக்கு போதிய பாதுகாப்பு அளிக்குமாறும் உத்தரவிட்டதுடன், பேரணி நடத்துவது தொடா்பாக ஆா்எஸ்எஸ் அமைப்பு போலீஸாரிடம் மூன்று தேதிகள் அளித்து விண்ணப்பிக்கலாம் என்றும், அவற்றில் ஒரு தேதியை போலீஸாா் பரிசீலனை செய்து அனுமதி அளிக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.