வீட்டின் மீதான தாக்குதல் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது: திருச்சி சிவா எம்.பி. பேட்டி

என் வீட்டின் மீதான தாக்குதல் மிகுந்த மனவேதனையையும், மிகுந்த மனச்சோர்வு ஏற்படுத்தியுள்ளது என்று திமுக மாநிலங்களை உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். 
வீட்டின் மீதான தாக்குதல் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது: திருச்சி சிவா எம்.பி. பேட்டி
Published on
Updated on
1 min read

என் வீட்டின் மீதான தாக்குதல் மிகுந்த மனவேதனையையும், மிகுந்த மனச்சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது என்று திமுக மாநிலங்களை உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். 

திருச்சி கண்டோன்மெண்ட் ஐயப்பன் கோயில் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி காலனியில் திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா வீடு உள்ளது. இந்த வீட்டையொட்டிய பகுதியில் புதன்கிழமை திறக்கப்பட்ட நவீன இறகுப்பந்து உள் விளையாட்டரங்கத் திறப்பு விழா கல்வெட்டில் திருச்சி சிவாவின் பெயா் இடம் பெறவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த சிவாவின் ஆதரவாளா்கள் சிலா், திறப்பு விழாவுக்கு அமைச்சா் கே.என். நேரு சென்றபோது அவரது காரை மறித்து கருப்புக்கொடி காட்டினா். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து சிவா எம்.பி.யின் வீட்டின் வளாகத்துக்குள் நுழைந்த நேருவின் ஆதரவாளா்கள், அங்கிருந்த காா், இருசக்கர வாகனம், வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள், நாற்காலிகளை அடித்து உடைத்தனா். இதைத் தொடா்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

இச்சம்பவங்கள் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து இருதரப்பு புகாா்களின்பேரில் நீதிமன்றக் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனர். 

இச்சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ள 5 பேரையும் புதன்கிழமை இரவு கைது செய்தனர். 

இந்த தாக்குதலின்போது மாநிலங்களவை உறுப்பினர் சிவா அரசு முறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்தாா்.

இந்நிலையில், அரசு முறைப் பயணங்களை முடித்துக்கொண்டு திருச்சி திரும்பிய சிவா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் பங்கேற்ற மாநாட்டிற்காக பஹ்ரைன் சென்றிருந்தேன். நடந்த செய்திகளை நான் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிந்துகொண்டேன். 

இதுகுறித்து நான் எதையும் பேசுகிற மனநிலையில் இல்லை. கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல சோதனைகளை சந்தித்துள்ளேன். அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை. யாரிடமும் புகார் அளித்ததுமில்லை. 

நான் தனி மனிதனை விட இயக்கம் பெரிது, கட்சி பெரிது என்று எண்ணுகிறவன். 

தற்போது நடந்துள்ள நிகழ்வுகள் மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. நான் ஊரில் இல்லாத போது என்னுடை குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். 

எனது வீட்டில் பணியாற்றிய 65 வயதுடைய பெண்மணி காயமடைந்துள்ளார். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால், இப்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை.

என் வீட்டின் மீதான தாக்குதல் மிகுந்த மனவேதனையையும், மிகுந்த மனச்சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. மனச்சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தியதில்லை. 

சம்பவம் குறித்து இப்போது நான் எதுவும் பேச முடியாது என்று எம்.பி. சிவா கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com