லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தால்தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும்: அமைச்சர் விளக்கம்

தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தால்தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். 
லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தால்தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும்: அமைச்சர் விளக்கம்
Published on
Updated on
1 min read


விருதுநகர்: தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தால்தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். 

தமிழ்நாட்டு இருக்கும் அரசு அலுவலகங்களில் சில ஊழியா்கள் பொதுமக்களிடம் பரிசு பெறுவதாக கூறி கட்டாய லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ஏராளமான புகாா்கள் வந்தன.

இதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் மாநிலம் முழுவதும் புகாா் வரும் பத்திரப்பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானம் கழகம், வணிக வரித் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,சாா் பதிவாளா் அலுவலகம், ஊரக வளா்ச்சித்துறை மற்றும் நகா் ஊரமைப்பு இயக்கம் என 60 அரசு அலுவலகங்களில் புதன்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.33 லட்சத்து 75 ஆயிரத்து 773 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கணக்கில் காட்டப்படாத ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் கைப்பேசி செயலி மூலம் தனிநபருக்கு பண பரிவா்த்தனை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதேபோல லஞ்சம் வாங்கியது தொடா்பாக முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில், ராஜபாளையத்தில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட ரயில்வே மேம்பால பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலம் திறக்கப்படும்.  

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி சாலை வரை இணைப்பு சாலை பணிகளும் விரைவில் தொடங்கப்படும். 

ராஜபாளையம், சத்தியமங்கலம், பொள்ளாச்சி ஆகிய 3 நகராட்சிகளில் சொத்து வரி அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரியை குறைப்பதற்காக நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் வரிகள் குறைக்கப்படும் என்றார். 

மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றால்தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும். 

மக்களை அரசு அதிகாரிகள் அலைக்கழிப்பது சோதனை மூலம் மட்டுமே குறையும். லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com