செம்மண் கடத்தல்: கடமையைச் செய்த வருவாய் ஆய்வாளரைத் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர்!

துறையூர் அருகே செம்மண் கடத்தலின்போது கடமையை செய்த வருவாய் ஆய்வாளரை ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான வருவாய் ஆய்வாளர் பிரபாகரன்
தாக்குதலுக்குள்ளான வருவாய் ஆய்வாளர் பிரபாகரன்

துறையூர்: துறையூர் அருகே செம்மண் கடத்தலின்போது கடமையைச் செய்த வருவாய் ஆய்வாளரை ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறையூர் அருகேயுள்ள ரெங்கநாதபுரம் தெற்கு தெரு பரம தயாளன் மகன் பிரபாகரன். இவர் திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுகிறார்.

நரசிங்கபுரம்  கிராமத்தில் மலையடிவாரம் பகுதியில் அரசு அனுமதியின்றி செம்மண் திருடி கடத்தப்படுவதாக தனக்கு கிடைத்த தகவலையடுத்து அதனைத் தடுப்பதற்காக துறையூர் வட்டாட்சியர் வனஜா வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை சனிக்கிழமை இரவு 10 மணியளவில் களத்திற்கு நேரடியாக அனுப்பினர்.

வட்டாட்சியரின் உத்தரவையடுத்து அந்தப் பகுதிக்கு தனி ஆளாக விரைந்து சென்ற பிரபாகரன்  நரசிங்கபுரம் டைல்ஸ் பிள்ளையார் கோவில் அருகே எதிரே வந்த ஜேசிபி வாகனத்தை மறித்து வாகனத்திலிருந்து சாவியையும், வாகன ஓட்டுனர் கந்தசாமியின்  செல்லிடப்பேசியையும் எடுத்துக் கொண்டு செம்மண் திருடப்படுவதாக சொல்லப்பட்ட மலையடிவாரம் பகுதிக்கு செல்ல தன் வாகனத்தை எடுக்க முயற்சித்தார். 

அப்போது நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வ. மகேஸ்வரன் (45), ஜேசிபி வாகன உரிமையாளர் பெ. தனபால் (47), அவர்களுடைய உதவியாளர் பூ. மணி (25) ஆகியோர் வருவாய் ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் திட்டி கீழேக் கிடந்த கல்லை எடுத்து தாக்கினராம்.

மணி வருவாய் ஆய்வாளர் பின் கழுத்தில் கடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதிக்கு நரசிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன் உள்ளிட்ட வருவாய் துறையினர் அந்த இடத்துக்கு சென்றனர்.

இதனையடுத்து தாக்கியவர்கள் தப்பிச்சென்றனராம். வருவாய் துறையினர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை மீட்டு பெருமாள்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்த பின்னர் துறையூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிப் பிரிவில் சேர்ந்து சிகிச்சையளித்தனர்.

இது தொடர்பாக துறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும் வருவாய் துறையினர் வருவாய் ஆய்வாளரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்ற நேரத்தை பயன்படுத்தி இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தங்களிடமிருந்த மாற்றுச்சாவியை பயன்படுத்தி செம்மண் திருட்டில் பயன்படுத்திய வாகனங்களை நிகழ்விடத்திலிருந்து அகற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

செம்மண் திருட்டை தடுக்கச் சென்ற வருவாய்துறை அதிகாரியை ஊராட்சி மன்றத்  தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் இரவில் தாக்கிய சம்பவம் துறையூர் பகுதியிலும், வருவாய் துறை ஊழியர்கள் மத்தியிலும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com