நடுவழியில் பேருந்து, ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது: போக்குவரத்து காவல்துறை

பேருந்து, ஆட்டோக்களை நடுவழியில் நிறுத்தி ஆள்களை ஏற்றவோ இறக்கவோ கூடாது என்று சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
நடுவழியில் பேருந்து, ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது: போக்குவரத்து காவல்துறை


சென்னை: போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாக இருக்கும் வகையில், பேருந்து, ஆட்டோக்களை நடுவழியில் நிறுத்தி ஆள்களை ஏற்றவோ இறக்கவோ கூடாது என்று சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

மேலும், சென்னையில் பேருந்து மற்றும் ஆட்டோ நிறுத்துமிடங்கள் என 80 இடங்களை தேர்வு செய்து, அவற்றில் மட்டும் பேருந்து மற்றும் ஆட்டோக்களை , மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூடு இல்லாமல் நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவருக்கும், சென்னைப் போக்குவரத்துக் காவல்துறையினர் அறிவுறுத்தலை வெளியிட்டிருப்பதாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், பேருந்து நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ வேண்டும். ஆனால், பேருந்து நிறுத்தம் இருக்கும் இடத்தில் சாலைக்கு நடுவே பேருந்து அல்லது ஆட்டோக்களை நிறுத்த வேண்டாம். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், திடீரென வாகனங்கள் சாலையோரம் திரும்பும்போது பின்னால் வரும் வாகனங்கள் இடித்து விபத்து நேரிடும் அபாயம் இருப்பதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், ஆட்டோக்களும், பயணிகளை ஏற்றவும் இறக்கவும், சாலையின் நடுவே திடீரென நிறுத்தும்போது வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திநகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், அசோக் நகர், மீனம்பாக்கம், திருவான்மியூர்  போன்ற இடங்களில் சாலைகளில் மஞ்சள் கோடுகள் இடப்பட்டு, அவை பேருந்துகள் நிறுத்துமிடமாக அறிவிக்கப்படுகிறது. சாலைகள் பெரிதாக இருந்தால் தடுப்புகள் ஏற்படுத்தப்படும். இதற்குள் பேருந்துகளை நிறுத்திக்கொள்ளலாம். எனினும் சில பேருந்துகள் முன்னால் நிற்கும் பேருந்துகளுக்குப் பின்னால் நிறுத்தாமல், ஓவர்டேக் செய்து நடு வழியில் நிறுத்தும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், பேருந்து நிறுத்தங்களுக்கு அருகே ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது என்று பேருந்து ஓட்டுநர்கள் கூறுவதாகவும், இதனால், பேருந்துகளை நிறுத்தகவும், எடுக்கும்போதும் சிக்கல் ஏற்படுவதாகவும் புகார்களைத் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நிலையத்தை, பெரும்பாலான ஆட்டோக்கள், தங்களது நிறுத்துமிடமாகப் பயன்படுத்திக் கொள்வதால், பேருந்துகள் நிறுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால்தான், நடுவழியில் பேருந்துகளை நிறுத்தவும், பேருந்து நிலையத்துக்கு முன்போ அல்லது சற்றுத் தள்ளியோ பேருந்துகளை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, பேருந்துகளும் சரியாக பேருந்து நிறுத்தத்துக்கு அருகே நிற்கவும், ஆட்டோக்களுக்கு என வரையறுக்கப்பட்ட இடங்களில் மட்டும் ஆட்டோக்கள் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறை தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அலுவலகம் செல்வோர், பல மணி நேரம் சாலைகளில் ஊர்ந்து செல்லும் நிலை தவிர்க்கப்படும் என்று மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com