போக்சோ வழக்கில் திருப்பம்: 9 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோருடன் இணைந்த பெண்

பதிவு செய்யாத குழந்தைகள் இல்லம் நடத்தி வந்தவர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு விசாரணையில், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் தனது பெற்றோருடன் இணைந்துள்ளார்.
போக்சோ வழக்கில் திருப்பம்: 9 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோருடன் இணைந்த பெண்


வேலூர்: பதிவு செய்யாத குழந்தைகள் இல்லம் நடத்தி வந்தவர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு விசாரணையில், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் தனது பெற்றோருடன் இணைந்துள்ளார்.

ராணிப்பேட்டை நீதிமன்றத்தில், பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஒரு நபருக்கு எதிராக 2020ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட 18 வயது பெண், குற்றம் சாட்டப்பட்ட நபரின் சகோதரி என்று வாதிடப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், குற்றம்சாட்டப்பட்டவரின் பெற்றோரும் ஆதரவாக சாட்சியமளித்திருந்தனர்.

ஆனால், அவர்களுக்கு செய்யப்பட்ட மரபணு பரிசோதனையில் அது உண்மையில்லை என்று நிரூபிக்கப்பட்டது. உடனடியாக, குழந்தைகள் நல அமைப்பானது, அந்த சிறுமியின் உண்மையான பெற்றோரைத் தேடும் பணியில் இறங்கியது.

ஆறு வயதாக இருக்கும் போது வீட்டிலிருந்து காணாமல் போன அந்த சிறுமியால், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு பகுதியின் பெயரை மட்டும் நினைவுபடுத்திச் சொல்ல முடிந்திருக்கிறது. அந்த ஒரே ஒரு பெயரை வைத்துக் கொண்டு, அவரது குடும்பத்தைத் தேடும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். அப்பெண் சொன்ன இடத்தில் சென்று, அவரது பெற்றோர் பற்றிய விவரங்களைத் தேடினர்.

இதற்கு பல துறை ஒருங்கிணைப்பும் தேவைப்பட்டது. முதலில், ஒரு அரசு அதிகாரி மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்த சிறுமி படித்த துவக்கப் பள்ளி, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கொடுத்த தகவல் மூலம் அடையாளம் காணப்பட்டது. பிறகு, அந்த பள்ளி மூலம், காணாமல் போன சிறுமியின் பெற்றோரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோருக்கும் சிறுமிக்கும் நடந்த மரபணு சோதனை மூலம், மூன்று மாதங்களுக்கு முன்பு பெற்றோர் உறுதி செய்யப்பட்டனர். பிறகு சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தச் சிறுமி பெற்றோருடன் திங்கள்கிழமை சேர்த்துவைக்கப்பட்டார்.

சிறுமியின் பெற்றோர், எக்ஸ்பிரஸ் குழுவினரிடம் பேசுகையில், இத்தனை ஆண்டுகள் கழித்து, எங்களது குழந்தை எங்களுடன் சேர்ந்திருப்பது அளவிலா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றனர். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெற்றோர் இருவரும் கூலி வேலைக்குச் சென்றிருந்தபோது, இந்தச் சிறுமி காணாமல் போயிருக்கிறார். பல இடங்களில் சிறுமியைத் தேடிய பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை.

முதற்கட்ட விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் குழந்தைகள் இல்லத்தில், இந்தச் சிறுமி 9 வயதாக இருந்த போது ஒரு அடையாளம் தெரியாத பெண்ணால் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இல்லத்தில் இருந்து கொண்டு எட்டாம் வகுப்பு வரை பள்ளி சென்று வந்திருக்கிறார். பிறகு பள்ளிப்படிப்பைத் தொடரவில்லை. இந்தச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக 2020ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது நடந்த விசாரணையில்தான், அந்த குழந்தைகள் இல்லம் பதிவு செய்யப்படாமல் நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்தச் சிறுமி காவல்துறை பாதுகாப்புக்குக் கொண்டுவரப்பட்டார்.

இது குறித்து குழந்தைகள் நல ஆணையம் தரப்பில் கூறப்படுவது என்வென்றால், இதுவரை இதுபோன்ற 457 வழக்குகளை கையாண்டிருக்கிறோம், போக்சோ, வீட்டை விட்டு ஓடுவது, காணாமல் போவது போன்றவை இதில் அடங்கும். சில வழக்குகளில், வீட்டை விட்டுச் சென்ற குழந்தைகளை மீண்டும் குடும்பத்தில் இணைத்துக் கொள்ள பெற்றோர் விரும்புவதில்லை என்பதால், அவர்களை எங்கள் பாதுகாப்பிலேயே வைத்து, அவர்களது 21 வயது வரை கல்வி அளித்து, தொழில் பயிற்சி அளித்து, அவர்கள் வேலை வாய்ப்புப் பெறவும் உதவி செய்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com