திமுகவும், காங்கிரஸும் தமிழகத்தின் கலாசாரத்தை அழிக்க துடிக்கிறது: ஜெ.பி.நட்டா

திமுகவும், காங்கிரஸும் தமிழகத்தின் கலாசாரத்தை அழிக்க துடிக்கிறது: ஜெ.பி.நட்டா

திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தின் கலாசாரத்தை அழிக்க துடிக்கிறது என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பி.கார்த்தியாயினியை ஆதரித்து அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: பாஜக தமிழகத்தில் தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரம், அதன் தொன்மை ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தின் கலாசாரத்தை அழிக்க துடிக்கிறது.

பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்கள் உயர்ந்துள்ளது. 90 சதவீம் கைப்பேசிகள் தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆட்டோமொபைல் உற்பத்தியில், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் கோலோச்சி வந்த நிலையில், உலக அளவில் இந்தியா ஆட்டோ மொபைல் உற்பத்தியில் 3-ஆவது இடத்தில் உள்ளது.

கரோனாவை கையாண்டதில் பொருளாதாரத்தில் 13 ஆவது இடத்திலிருந்து 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மிகக் குறைந்த விலையில் மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. பெண்களுக்குஅதிகாரம் தருவது, படித்தஇளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, விவசாயிகள் வளர்ச்சி, பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள் வளர்ச்சி என 5 கொள்கைகளுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

இந்தியாவில் மாதம் 80 கோடி மக்களுக்கு இலவசமாக அரிசி, கோதுமை ஆகியவை மத்திய அரசு வழங்கி வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 30 லட்சம் விவசாயிகளுக்கு உதவித் தொகை, 40 லட்சம் பேருக்கு இலவச காஸ் இணைப்பு,14 லட்சம் வீடுகள் கட்டப்படுள்ளது. தமிழகத்துக்கு வழங்கப்படும் நிதி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கிராமபுறச்சாலை வசதி மேம்படுத்துதல், கிராமப் புறவளர்ச்சி என அனைத்துக்கும் அதிகப்படியான நிதிகள் வழங்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை திட்டத்துக்கு அதிகப் படியாக நிதி வழங்கப்பட்டுள்ளது. கோவை, ஒசூர், சேலம், திருச்சி,சென்னை ஆகிய இடங்களில் ரூ.1 2 ஆயிரம் கோடியில் பாதுகாப்பு தளவாடப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. சென்னை, பெங்களூர் தொழில்சாலை காரிடர் நகரங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஊழல் இல்லாத ஆட்சியை மோடி நடத்தி வருகிறார். ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே வாரிசு அரசியலையே முன்னிறுத்தி உள்ளது. இக்கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் குற்றச் சாட்டுகளில் சிக்கியுள்ளன. ஃபருக் அப்துல்லா காமன்வெல்த் கிரிக்கெட் ஊழல், லல்லு பிரசாத் மாட்டுத் தீவன ஊழல், அகிலேஷ் யாதவ் மடிக் கணினி ஊழல், கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல், திமுக கருணாநிதி குடும்பம் வருமான வரி ஊழல் உள்ளிட்ட ஊழலில் சிக்கித் தவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியில் சோனியாகாந்தி, ராகுல் காந்தி, சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட அனைவருமே தற்போது ஜாமீன் வாங்கி வெளியில் உள்ளனர். இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில் என்ற ஊழல் கட்சியாகவே உள்ளது.

இங்குள்ள திமுக கொள்ளை அடிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது என்பது தான் கொள்கையாகும். எனவே இவர்களது ஊழலை ஒழிக்க பிரதமர் மோடி 3 ஆவது முறையாக ஆட்சிக்கு வர நீங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com