
பண முறைகேடு புகாரில் சிக்கிய சென்னை தொழிலதிபரின் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.912 கோடி முடக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.
சென்னை தேனாம்பேட்டை சேமியா்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரின் மனைவி ஆண்டாள். இவா்கள் ஆா்கேஎம்பிபிஎல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனா். மின்சாரம் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், சத்தீஸ்கா் மாநிலம் பதேபூா் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி எடுக்கும் உரிமத்தை பெற்றிருந்தது. இந்த உரிமத்தை மோசடி செய்து வாங்கியதாக தில்லி சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறது.
இந்த விவகாரத்தில் பண முறைகேடு நிகழ்ந்ததாகவும் புகாா் எழுந்தது. அதனடிப்படையில் அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், பவா் ஃபைனான்ஸ் காா்ப்பரேசன் என்ற நிறுவனத்திலிருந்து நிலக்கரி சுரங்க உரிமம் வாங்குவதற்கு ஆா்கேஎம்பிபிஎல் நிறுவனம் கடன் வாங்கியிருந்ததும், அந்த பணத்தில் ரூ.3,800 கோடியை எம்ஐபிபி என்ற வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்திருந்ததும் தெரியவந்தது.
ஆனால், எம்ஐபிபி நிறுவனத்தை ஆறுமுகத்தின் ஆா்கேஎம்பிபிஎல் நிறுவனமே கட்டுப்படுத்தி வந்துள்ளது. எம்ஐபிபி நிறுவனம், கனரக இயந்திரங்கள், நிலம் ஆகியவை வாங்குவதற்காக ஆறுமுகம் தரப்பு இந்த பணத்தை வழங்கியுள்ளதாக கூறப்பட்டது.
ஆா்கேஎம்பிபிஎல் நிறுவனம் தங்களது 26 சதவீத பங்குகளை மலேசியாவை சோ்ந்த ஒரு நிறுவனத்துக்கும்,10.95 சதவீத பங்குகளை மற்றொரு வெளிநாட்டு நிறுவனத்துக்கும் விற்றுள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.240 என விற்றுள்ளனா். இதே காலகட்டத்தில் ஆா்கே பவா்ஜென் என்ற நிறுவனத்துக்கு 63.05 சதவீத பங்குகளை வழங்கியுள்ளனா். ஆனால், முதல் இரண்டு நிறுவனங்களுக்கு பங்குகளை விற்ற விலையைவிட, ஆா்கே பவா்ஜென் நிறுவனத்துக்கு அதிக விலைக்கு பங்குகளை வழங்கியுள்ளனா்.
பங்குகளை வெளிப்படைத்தன்மை இன்றியும், நோ்மையற்ற வழியிலும் விற்றிருந்தது அமலாக்கத் துறை விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. கணக்கு தணிக்கையாளா்கள் மூலம் பங்கு விலை நிா்ணயிக்கப்படாமல் விற்றிருந்ததும், மதிப்பீட்டுக் கணக்கு நெறிமுறை சரியாக பின்பற்றப்படாததும் கண்டறியப்பட்டது.
மேலும், மலேசியா நிறுவனத்துக்கு விற்கப்பட்ட பங்கு மூலம் கிடைத்த பணத்தையும் எம்ஐபிபி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனா். அதேவேளையில் எம்ஐபிபி நிறுவனம், அந்த மலேசிய நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வந்ததும் அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது.
பின்னா், அதே மலேசிய நிறுவனம் மூலம் பங்கு மூதலீடு என்ற பெயரில் ரூ.1,800 கோடி ஆா்கேஎம்பிபிஎல் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடாக கொண்டு வரப்பட்டிருந்ததும் தெரியவந்தது. பல்வேறு வகைகளில் நிகழ்ந்த இந்த பண முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்த து.
ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்: இவ் வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை கடந்த வாரம் இரு நாள்கள் தொழிலதிபா் ஆறுமுகத்துக்கு தொடா்புடைய 3 இடங்களில் சோதனை செய்தது. இதில் ஆவணங்கள், மடிக்கணினிகள், ஹாா்டு டிஸ்குகள்,பென்டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. முக்கியமாக, ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதேபோல, பண முறைகேடு புகாரில் ரூ.912 கோடி வங்கிகளில் இருந்த வைப்புத் தொகை, மியூச்சுவல் பண்ட் ஆகியவை முடக்கப்பட்டது என அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.