
பிகாரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் திருநெல்வேலியில் நடந்துள்ளது.
சுமார் 20 ஆண்டுகளாக மனநலப் பாதிப்பால் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிகாரைச் சேர்ந்த ஒரு நபர், திருநெல்வேலியில் உள்ள சோயா டிரஸ்ட் (Soya Trust) என்ற தன்னார்வ அமைப்பின் தொடர் முயற்சியால் இன்று(ஜூலை 1) தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வு, அங்கிருந்தோர் அனைவருக்கும் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பலேஷ்வர் யாதவ் என்ற இந்த நபர், 2005 ஆம் ஆண்டு முதல் மனநலம் பாதிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீண்ட தேடலுக்குப் பிறகு, இவர் 2022 ஆம் ஆண்டு சிவகங்கையில் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள சோயா டிரஸ்ட் காப்பகத்தில் ஆதரவற்று சேர்க்கப்பட்டார்.
சோயா டிரஸ்டின் திட்ட ஒருங்கிணைப்பாளர்களான சாரதா, மாரிமுத்து மற்றும் டேவிட் ஆகியோர் அடங்கிய குழு, பலேஷ்வர் யாதவின் குடும்பத்தினரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டது.
பிகார் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காணாமல் போன மற்றொரு நபராகிய சனோஸ் குமார் குறித்த தேடலின் போது, பலேஷ்வர் யாதவ் பற்றிய தகவல்கள் சோயா டிரஸ்டின் மூலம் கிடைத்தன.
பலேஷ்வர் யாதவ் பிகாரின் செர்க்கி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவரது உறவினர் அனில் யாதவ் என்பவர் சேலத்தில் உள்ள ஒரு காப்பர் வயர் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார் என்பதும் உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, அனைத்து ஆய்வுகளும் முடிக்கப்பட்டு, இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் முன்னிலையில் பலேஷ்வர் யாதவ் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சோயா டிரஸ்ட் அமைப்பின் அர்ப்பணிப்புள்ள பணியையும், மனநலம் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்கு அவர்கள் ஆற்றிவரும் சேவையையும் மாவட்ட ஆட்சியர் சுகுமார் பாராட்டினார். இத்தகைய மனிதாபிமானப் பணிகள் சமூகத்தில் மேலும் பரவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
A heartbreaking incident has taken place in Tirunelveli where a mentally challenged man from Bihar was reunited with his family after 20 years.
இதையும் படிக்க: அஜித்குமார் கொலை வழக்கு: மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.