பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதல்வர்: அண்ணாமலை

பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதல்வர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்.
மு.க. ஸ்டாலின் / அண்ணாமலை
மு.க. ஸ்டாலின் / அண்ணாமலைகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மும்மொழிக் கொள்கைக்கு மக்கள் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு முதல்வர், பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமரிசித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து தமிழக பாஜக சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை.

அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. திமுகவின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும். இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதலமைச்சர் அவர்களே?

தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்?" என்று பதிவிட்டுள்ளார்.

புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் அனுமதி அளித்தால் மட்டுமே கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கைதான் என மும்மொழிக் கொள்கைக்கு எதிராக சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com